தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜனவரி 7) சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "பாமக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுவிட்டது. மற்ற விவரங்களை பின்னர் அறிவிப்போம். இது வெற்றிக் கூட்டணி. மேலும் பல கட்சிகள் இணையும்" என்றார்.
அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "பாமக தொண்டர்களின் எதிர்பார்ப்புப்படி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். திமுக ஆட்சியை அகற்றவே இந்தக் கூட்டணி. மக்களிடையே திமுகவுக்கு எதிரான கோபம் அதிகரித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றில் திமுக தோல்வியடைந்துள்ளது. அதிமுக தலைமையில் கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.
இதையும் படிங்க: கொஞ்சம் விட்டுக்கொடுங்க பழனிசாமி!! அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்! பீகார் அலைக்கு அஸ்திவாரம்!
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது கட்சியில் டாக்டர் ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரு அணிகளாகப் பிரிந்துள்ளது.

அன்புமணி அணியில் 3 எம்எல்ஏக்களும், ராமதாஸ் அணியில் 2 எம்எல்ஏக்களும் உள்ளனர். இந்தப் பிரிவினை காரணமாக தொகுதி ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தகவல்களின்படி, பாமகவுக்கு 17 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த முறையைவிட 6 தொகுதிகள் குறைவு. ஆனால் அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி விரைவில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க உள்ளார்.
இந்தக் கூட்டணி திமுக ஆட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமகவின் வன்னியர் வாக்குவங்கு வட தமிழகத்தில் கூட்டணிக்கு வலு சேர்க்கும். பாமக தொண்டர்கள் மத்தியில் இந்தக் கூட்டணி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எத்தனை தொகுதி? அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை!! சூடுபிடிக்கும் தேர்தல்களம்!