தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளால் அனல் பறந்து வரும் நிலையில், "தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க முடியாது; நிச்சயம் கூட்டணி அமைப்போம்" எனப் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அதிமுக மற்றும் பாஜக இடையே இன்று முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் சென்னையில் தொடங்கியுள்ள சூழலில், தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ், பாமகவின் நிலைப்பாடு குறித்து நிலவி வந்த பல்வேறு யூகங்களுக்குப் பதிலளித்தார். குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவருக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாகக் கூறப்பட்ட தகவல்களை அவர் முற்றிலும் மறுத்துள்ளார். தமிழக அரசியலில் பாமக எந்தப் பக்கம் சாயும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் வேளையில், அவரது இந்தப் பேட்டி கூட்டணி கணக்குகளை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த டாக்டர் ராமதாஸ், "இதுவரை எந்தக் கட்சித் தலைவர்களும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை; கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக யாரும் பேச வரவில்லை" எனத் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு, "அவர் மீது எனக்கு எவ்வித வருத்தமும் கிடையாது; ஏன் வருத்தப்பட வேண்டும்?" எனப் பளிச்சென்று பதிலளித்தார். இதன் மூலம் அதிமுக - பாமக கூட்டணிக்கு இன்னும் கதவுகள் திறந்தே இருப்பதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "பாமக யாருக்கு சொந்தம்?" சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு தொடக்கம்! 'ஐயா தான் ஆணிவேர்' முழக்கத்தால் அதிரும் அரங்கம்!
"தற்போதைய அரசியல் கள எதார்த்தத்தை உணர்ந்துள்ளோம்; கூட்டணி இல்லாமல் தனித்து நின்று தேர்தலைச் சந்திப்பது சாத்தியமில்லை. எனவே, எங்களது கொள்கைகளுடன் ஒத்துப்போகும் கட்சிகளுடன் நிச்சயம் கூட்டணி அமைப்போம்" என அவர் உறுதியாகக் கூறினார். கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பிலிருந்தும் பாமகவுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ராமதாஸின் அரசியல் தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பாமக தனது அதிகாரப்பூர்வக் கூட்டணி முடிவை அறிவிக்கும் எனத் தைலாபுரம் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: “பாமக கூட்டணியில் இருந்தபோதும் நாங்கள் வென்றோம்!” திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு அதிரடி பேட்டி!