தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை ஒரே நேரத்தில் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான விருப்ப மனுக்கள் விநியோகம் எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளில் இன்று (டிசம்பர் 15) முதல் தொடங்கியுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு விநியோகம் சென்னை பனையூரில் உள்ள அன்புமணி ராமதாஸ் அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
- பொதுத் தொகுதி: ₹10,000
- தனித் தொகுதி: ₹5,000
- பெண்களுக்கு மட்டும்: ₹5,000
பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் டிசம்பர் 20-ஆம் தேதி மாலை 6 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அன்புமணி அலுவலகத்தில் மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். முதல் நாளிலேயே பல பாமக-வினர் மனுக்களைப் பெற்று அன்புமணியிடம் வழங்கினர்.
இதையும் படிங்க: என்எல்சி CSR நிதிக் முறைகேடு: நெய்வேலி மக்கள் புறக்கணிப்பு - சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சியான அதிமுகவிலும் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விண்ணப்பங்கள் ₹15,000க்கான காசோலையைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
அதிமுக மற்றும் பாமகவுக்கு முன்பாகவே காங்கிரஸ் மற்றும் அமமுக சார்பில் கடந்த 10-ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. அதிமுக சார்பில் விண்ணப்ப மனு கட்டணம் ₹10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் விண்ணப்ப மனுவுக்குக் கட்டணம் கிடையாது.
ஆளும் திமுக அரசு இளைஞர் அணி மாநாடுகள் நடத்துவது, வீடு வீடாகச் சென்று அரசு நலத்திட்டங்களை எடுத்துரைப்பது என மும்முரமாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தொகுதி வாரியாக மக்களைச் சந்தித்து வருகிறார். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. முதல்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் தவெகவும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.
அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டுவதால், அடுத்த சில நாட்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "பாமக-வைக் கைப்பற்ற சதி!" ஜி.கே. மணி மற்றும் அவரது மகனுக்கு எதிராகப் பாமக வழக்கறிஞர் பாலு புகார்!