டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக 'கல்லறை தோண்டப்படும்' போன்ற முழக்கங்கள் எழுப்பியதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. இதனால் இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, “பிரதமருக்கு எதிராக அப்படி எந்த முழக்கங்களும் எழுப்பப்படவில்லை.
இதையும் படிங்க: நேரு மீது ராஜ்நாத் சிங் சுமத்திய குற்றச்சாட்டு!! பாஜக மீது பிரியங்க காந்தி பாய்ச்சல்!
மேடையில் யாரும் அப்படி பேசவில்லை. கூட்டத்தில் இருந்த பொதுமக்களில் யாரோ ஒருவர் அல்லது காங்கிரஸ் தொண்டர் ஒருவர் அப்படி கூறியதாக கேள்விப்பட்டோம். ஆனால் அது யார் என்று தெரியவில்லை. அப்படி நடந்ததாகவும் எங்களுக்குத் தெரியவில்லை” என்று திட்டவட்டமாக மறுத்தார்.

பா.ஜ.க. இதை பாராளுமன்றத்தில் எழுப்பியது ஏன் என்று கேள்வி எழுப்பிய பிரியங்கா, “பாராளுமன்றம் செயல்பட வேண்டும் என்று பா.ஜ.க. விரும்பவில்லை. டெல்லி காற்று மாசுபாடு குறித்து விவாதம் நடத்த கோருகிறோம். ஆனால் அவர்கள் முன்வரவில்லை” என்று விமர்சித்தார்.
மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முயல்வதை விமர்சித்த பிரியங்கா, “திட்டத்தின் பெயரை மாற்றுவதால் என்ன பலன்? மகாத்மா காந்தி என்ற பெயரை நீக்குவது ஏன்? இதனால் எவ்வளவு செலவு ஆகும் என்பது மக்களுக்குத் தெரியுமா?” என்று கேள்விகளை எழுப்பினார்.
இந்த சர்ச்சை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்யசபாவில் கொதிக்கும் நட்டா! அனல் பறக்கும் வாதம்!