தேசிய அளவிலான அரசு போட்டித்தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு கடும் தண்டனை வழங்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தேர்வு முறைகேடுகளை முற்றிலும் கட்டுப்படுத்த புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, வினாத்தாள்களை கசியவிடுதல், தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுதல் மற்றும் அதற்கு துணைபுரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த மசோதா வழிவகுக்கிறது.
புதிய சட்டத்தின் கீழ், தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க முடியும். தேர்வின் நம்பகத்தன்மையை பாதுகாக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யவும் இந்த சட்டம் முக்கிய பங்காற்றும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாணவர்கள் மீதான தாக்குதல் எதிரொலி! கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அமளி! முடங்கியது நாடாளுமன்றம்!

இந்த மசோதா கடந்த 27-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, விரிவான விவாதத்திற்குப் பிறகு நேற்று நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இந்த மசோதா குறித்து சுமார் 10 மணி நேரம் விவாதம் நடைபெற்றதாகவும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் மற்றும் அமளிக்கு மத்தியிலும் அரசின் தரப்பில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் மசோதாவை தாக்கல் செய்து பேசிய அவர், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக கூறினார். தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த மசோதா தற்போது ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இரு அவைகளிலும் நிறைவேறி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த பிறகு, இது சட்டமாக அமலுக்கு வரும். இதன் மூலம் அரசு போட்டித்தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிச் சூடா?"... பிகார் சம்பவத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!