புதுடெல்லி: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு அதிகரித்துள்ளது. தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையே, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழக காங்கிரஸில் இரு தரப்புகள் உருவாகியுள்ளன. ஒரு தரப்பு திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மற்றொரு தரப்பு, நடிகர் விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
சில காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசை விமர்சித்தும், தவெகவுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருவதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் தரப்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரும் குரல்களும் வலுப்பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: வார்த்தைகளில் வெடித்த ஜோதிமணி! டெல்லி தலைமையின் விருப்பமும் அதுதான்! பற்றவைக்கும் வேலுச்சாமி!

இந்தச் சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். வரும் ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தில்லியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, திமுகவுடன் தொடர்வதா அல்லது தவெகவுடன் புதிய கூட்டணி அமைப்பதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் இந்த ஆலோசனை பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எந்த கட்சியிலயும் இப்படி நடக்காது!! தமிழ்க காங்கிரஸ் அழிவின் பாதையில் போகிறது! ஜோதிமணி உருக்கம்!