சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்பிரச்சினைகள் தொடர்ந்து வெளியே வரும் நிலையில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த அரசியல் கட்சியும் தனது நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி முகவர் பட்டியல் கொடுக்க விடாமல் முடக்க நினைக்காது என்று கூறிய ஜோதிமணி, ஆனால் காங்கிரஸில் அது நடப்பதாகவும், தமிழக காங்கிரஸில் நடப்பவை மிகுந்த கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸில் தொடரும் உள்கட்சி பிரச்சினைகள் மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும், ஒரு சிலரின் சுயநலத்துக்காக கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிவுப்பாதைக்குச் செல்வதாகவும் ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? தமிழக காங்.,சில் கோஷ்டி மோதல்! விளாசும் நயினார் நாகேந்திரன்!
ராகுல் காந்தியின் தன்னலமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழக காங்கிரஸ் சென்றுகொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பதிவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். ஜோதிமணி குறை சொல்லும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை என்றும், எல்லோரையும் அரவணைத்துச் செல்வதே தலைமை பண்பு என்றும் அவர் கூறியுள்ளார். தான் எல்லோரையும் அரவணைத்துச் சென்றுகொண்டிருப்பதாகவும் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி இது குறித்து பேசுகையில், ஜோதிமணி தமிழக காங்கிரஸ் தலைமை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கும் ஜோதிமணி, டெல்லி தலைமையின் விருப்பத்தை தனது பதிவில் வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார். டெல்லி தலைமைக்கு தெரியாமல் இதைச் செய்திருக்க மாட்டார் என்றும், இதற்கு முன்பு இது போன்ற விமர்சனங்களை அவர் வைத்ததில்லை என்றும் வேலுச்சாமி கூறினார்.
ஜோதிமணியை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோதிமணியின் இந்தப் பதிவு தமிழக காங்கிரஸில் நீண்டகாலமாக நிலவும் உள்மோதல்களை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் ஒற்றுமை குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: ராகுல்காந்திக்கு சொந்த கட்சிக்குள்ளேயே வலுக்கும் எதிர்ப்பு! பிரியங்கா கையில் பொறுப்பு தர காங். தலைவர்கள் திட்டம்!