சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் உள்பிரச்சினைகள் தொடர்ந்து வெளியே வருவதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜோதிமணி கடும் வேதனை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் விரிவாக எழுதியுள்ள கருத்துகள் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஜோதிமணி தனது பதிவில், எந்த அரசியல் கட்சியும் தனது நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி முகவர் பட்டியல் கொடுக்க விடாமல் முடக்க நினைக்காது என்று கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸில் அது நடப்பதாகவும், தமிழ்நாடு காங்கிரஸில் நடப்பவை மிகுந்த கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொள்கை நிலைப்பாடுகளையும் அரசியல் செயல்பாடுகளையும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகள் வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமும் தமிழ்நாடு காங்கிரஸ் மக்கள் பிரச்சினைகள் அல்லாத தவறான காரணங்களுக்காக செய்திகளில் இடம்பெறுவதாகவும் ஜோதிமணி விமர்சித்துள்ளார். தமிழ்நாடு மதவாதம், பிரிவினைவாதம், வன்முறை சக்திகளிடமிருந்து பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சி மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் கட்சி அந்தப் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு 3 முறை ஒத்திவைப்பு!! 'பேரம் பஞ்சாயத்து' எதிரொலியா?! உற்சாகம் இழந்த தொண்டர்கள்!
60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் காங்கிரஸ் கொடியை ஒவ்வொரு ஊரிலும் பெருமையுடன் ஏந்தி நிற்கும் தொண்டர்களின் உணர்வுகளையும், சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காக போராடும் மக்களையும் கைவிடக்கூடாது என்று ஜோதிமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உட்கட்சி பிரச்சினைகள் கட்டுப்பாடின்றி தொடர்வது மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும், சித்தாந்த அரசியலை முன்னெடுக்காமல் வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டும் செய்து சிலரின் சுயநலத்துக்காக கட்சி அழிவுப்பாதைக்குச் செல்வதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தியின் தன்னலமற்ற, கொள்கைப்பிடிப்பு மிகுந்த அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்றுகொண்டிருப்பதாகவும், அவரது கடின உழைப்புக்கும் தியாகத்துக்கும் துரோகம் செய்ய முடியாது என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார். காங்கிரஸின் அடையாளமும் மரியாதையும் காமராஜர், நேரு-காந்தி குடும்பத்தின் பாரம்பரியத்தால் வந்தது என்று நினைவூட்டிய அவர், உண்மையான தொண்டர்கள் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய நேரம் இது என்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஜோதிமணியின் இந்தப் பதிவு தமிழக காங்கிரஸில் நீண்டகாலமாக நிலவும் கோஷ்டி மோதல்களையும் உள்பிரச்சினைகளையும் மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் ஒற்றுமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: பழங்குடியின மாணவரின் உயிரை பறித்த கும்பல்!? பொறுப்பில்லாத சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது! ராகுல்காந்தி கண்டனம்!