பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக தலைமைப் பிரச்சினை காரணமாக மோதல் நீடித்து வருகிறது.
இதனால் கட்சி இரு அணிகளாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் அன்புமணியைத் தலைவராக அங்கீகரித்தது தொடர்பாக ராமதாஸ் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ம.க. துணைப் பொதுச்செயலருமான ஏ.கே.மூர்த்தியின் மகன் விஜய் மகேஷின் திருமண விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ராமதாஸ் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்ல! வேணும்னா தனிக்கட்சி துவங்கட்டும்! ராமதாஸ் தடாலடி!
மணமக்களை வாழ்த்திவிட்டு அவர் அங்கிருந்து சென்ற பிறகு, அன்புமணி தனது மனைவி சௌமியா மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். இவ்வாறு இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்தனர்.
ஆனால், மேடையில் இருந்து இறங்கிய கவுரவத் தலைவர் ஜி.கே.மணியும், மேடைக்கு ஏறச் சென்ற அன்புமணியும் சந்தித்தனர். அப்போது இருவரும் புன்னகைத்தபடி ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
பா.ம.க. நிர்வாகிகள் கூறுகையில், ஏ.கே.மூர்த்தி இரு அணிகளுடனும் நல்லுறவு கொண்டவர். ராமதாஸுடன் குடும்பச் சம்பந்தம் உள்ளதால் அவர் நடுநிலையில் இருக்கிறார். அதனாலேயே இரு தலைவர்களும் திருமணத்திற்கு வந்தனர் என்றனர்.

மேலும், அன்புமணி தரப்பினர் ஜி.கே.மணியையே பிளவுக்கு காரணம் என்று குற்றம் சாட்டி வரும் நிலையில், அவர்களது சந்திப்பு தந்தை-மகன் உறவில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே, ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பா.ம.க. மாநில நிர்வாகக்குழு கூட்டம் நாளை மறுதினம் (டிசம்பர் 17) காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் தனது தலைமையில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
கட்சியின் வளர்ச்சி, அடுத்த கட்ட செயல்பாடுகள் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமதாஸ் கூட்டம் நடத்தும் அதே நாளில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வலியுறுத்தி அன்புமணி தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. பா.ம.க.வில் நீடிக்கும் இந்த மோதல், 2026 தேர்தலை முன்னிட்டு கட்சியின் ஒற்றுமைக்கு சவாலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: இன்னைக்கு வேணாம்! 23ம் தேதி வச்சுக்கலாம்! ஒத்திவைக்கப்பட்ட ஓபிஎஸ் கூட்டம்! டெல்லி சிக்னல் பிராப்ளம்!