திண்டிவனம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 5-ம் தேதி திண்டிவனம் அருகே தீவனூருக்கு முதல்வர் எம்.கே. ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிக்காக வர உள்ளார்.
அன்றைய தினம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். ஆனால் ராமதாஸ், முதல்வர் நேரில் வந்து புதிய பஸ் நிலையத்தையும் மருத்துவமனையையும் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ராமதாஸ் தனது அறிக்கையில் திண்டிவனத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கும் போதெல்லாம் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை அஸ்தமனமடைவதால் ஏற்பட்ட மூடநம்பிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார். 2001-ல் மேம்பாலம் திறக்கப்பட்டபோது அதற்கு காரணமான மத்திய அமைச்சர் வெங்கட்ராமனின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: தேசிய ஜனநாயக கூட்டணி நிகழ்ச்சியில் 'மாம்பழம்' சின்னம்..!! கொந்தளித்த ராமதாஸ்..!!
2009-ல் பஸ் நிலையம் அமைக்கப்படும் என அறிவித்த திண்டிவனம் நகராட்சி தலைவர் ஹீராசந்தின் அரசியல் வாழ்வும் முடிந்தது. 2023-ல் அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டிய பிறகு அவரது அமைச்சர் பதவியும் கட்சி பதவியும் பறிபோனது. இதனால் திண்டிவனத்தில் வளர்ச்சி பணிகளை தொடங்கும் அதிகாரிகள் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூடநம்பிக்கை திண்டிவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து பஸ் நிலையத்தை திறந்து வைப்பதன் மூலம் இந்த நம்பிக்கையை உடைத்து, பகுத்தறிவு பாதையில் தி.மு.க. செல்வதை நிரூபிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்டிவனம் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் முக்கிய இடம்பிடித்துள்ளது. புதிய பஸ் நிலையம் 6 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாஸின் இந்த அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவு கொள்கையை தி.மு.க. வலியுறுத்தி வரும் நிலையில், இது கட்சியின் கொள்கைக்கு ஏற்ற சவாலாக பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இதற்கு எப்படி பதிலளிப்பார் என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எத்தனை தொகுதிகள்..? ராஜ்யசபா சீட் கிடைக்குமா? பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி தீவிர ஆலோசனை..!