காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வாத்ராவை நாட்டின் எதிர்கால பிரதமராக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரிக்கின்றனர் என்று அவரது கணவர் ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் இதனை கூறிய அவர், பிரியங்கா கடினமாக உழைத்து வருவதாகவும், அவரது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளதாகவும் புகழாரம் சூட்டினார்.
ராபர்ட் வாத்ரா பேசுகையில், பிரியங்காவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று கூறினார். மக்கள் பிரியங்காவில் இந்திரா காந்தியை பார்க்கின்றனர் என்றும், அதேநேரம் அவருக்கு தனித்திறமைகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடர் தோல்வியால் துவளும் காங்கிரஸ்!! பிரியங்கா உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு?
மக்கள் சார்ந்த பிரச்னைகளை பிரியங்கா தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், காங்கிரஸ் எம்.பி.க்களே அவரை எதிர்கால பிரதமராக ஆதரிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இது மக்களிடம் பிரம்மிப்பை ஏற்படுத்தும் என்றும், அதற்காக பிரியங்கா கடினமாக உழைத்து வருவதாகவும் கூறினார். எங்கு தேவையோ அங்கு பிரியங்கா இருக்கிறார் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான இம்ரான் மசூத் அளித்த பேட்டியில், பிரியங்கா காந்தியை பிரதமராக்கினால், அவர் இந்திரா காந்தி போல வலுவான நடவடிக்கைகள் எடுப்பார் என்று கூறியிருந்தார்.
பாகிஸ்தானுக்கு இந்திரா காந்தி ஏற்படுத்திய சேதம் இன்னும் ஆறவில்லை என்று குறிப்பிட்ட அவர், பிரியங்காவும் அவ்வாறு செயல்படுவார் என்று தெரிவித்தார். இந்தக் கருத்து காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், ராபர்ட் வாத்ராவின் பேட்டி இதனை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

பிரியங்கா காந்தி தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், வயநாடு தொகுதி எம்.பி.யாகவும் செயல்பட்டு வருகிறார். அவரது அரசியல் பயணம் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
ராகுல் காந்தி கட்சியின் முக்கிய முகமாக இருந்து வரும் நிலையில், பிரியங்காவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற குரல்கள் கட்சிக்குள் எழுந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மகாத்மா காந்தி என் குடும்பம் கிடையாது!! ஆனாலும்! பார்லி-யில் ப்ரியங்கா காந்தி ஃப்யர் பேச்சு!