கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களின் நீண்டகால கனவு நிறைவேறும் நிலைக்கு வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட அங்கமாலி - எருமேலி இடையேயான 110 கி.மீ. சபரிமலை ரயில் பாதை திட்டம் இப்போது புதுப்பிக்கப்பட்டு வேகம் பிடித்துள்ளது.
இத்திட்டம் அங்கமாலியிலிருந்து பெரும்பாவூர், மூவாட்டுப்புழா, தொடுபுழா உள்ளிட்ட நகரங்களை இணைக்கும். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கு பயணம் எளிதாகும். ஆனால் கடந்த காலங்களில் நிலம் கையகப்படுத்தல் மற்றும் பிற காரணங்களால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. வெறும் 8 கி.மீ. நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்ட நிலையில் பணிகள் நின்றுவிட்டன.
தற்போது திட்டத்தின் மதிப்பீடு 3,800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 50 சதவீதத்தை கேரள மாநில அரசும், மீதமுள்ள 50 சதவீதத்தை ரயில்வே அமைச்சகமும் ஏற்கும். ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 18ஆம் படியேற 10 மணி நேரம் காத்திருப்பு!! சபரிமலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்!!
ஐயப்ப பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கேரள அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இத்திட்டத்திற்காக 1,905 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும், தேவையான நிலத்தை கையகப்படுத்தித் தரவும் மாநில அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ரயில்வே நிர்வாகம் இந்த பாதையை புனலூர் - நெடுமங்காடு வழியாக விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்துக்கும் பெரும் வசதி கிடைக்கும்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இத்திட்டம் நிறைவேறினால் கேரளாவில் பல புதிய ரயில் நிலையங்கள் உருவாகும். ஏற்கனவே தெற்கு ரயில்வே மண்டலத்தில் அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களில் கேரளா முக்கிய இடம் வகிக்கிறது. சபரிமலை ரயில் பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ஐயப்ப பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும். விழிஞ்ஞம் வரை நீட்டிக்கப்பட்டால் பொருளாதார வளர்ச்சி பெரிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மண்டல ரயில் இணைப்பு கிடைப்பதால் மணிகணக்கில் நடைபயணம் செய்யும் பக்தர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். சபரிமலை செல்லும் பாதை இனி ரயிலில் எளிதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க: போனா போகட்டும்! இனி வேண்டாம்! திமுக முடிவு! காங்கிரசை கழட்டி விட திட்டம்! கூட்டணியில் அதிர்ச்சி!