தமிழக அரசியல் களத்தில் மாஸ் லீடராக உருவெடுத்துள்ள விஜய் மக்களுக்குப் பணி செய்ய வேண்டும்; அவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் ஐடி விங் (IT Wing) மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த நெல்லை முபாரக், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, ‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ திரைப்படங்களுக்கு ஏற்பட்டுள்ள தணிக்கைச் சிக்கல்கள் குறித்துத் தனது அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய நெல்லை முபாரக், "எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கும்; அதற்கு ஏற்றார் போல பலமான கூட்டணி அமையும்" எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். கூட்டணி குறித்துத் தொடர்ந்து பேசிய அவர், "இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் எமது மாநிலக் குழு கூட்டம் நடைபெற உள்ளது; அதில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா அல்லது யாரிடம் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும். பாஜகவைத் தவிர மற்ற யாரையும் நாங்கள் வரவேற்கிறோம்; மக்களுக்கு உழைக்க வருபவர்களை ஆதரிக்கத் தயாராக உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: "அசல் ரசீது முக்கியம்!" அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று தொடக்கம்! ராயப்பேட்டையில் குவியும் நிர்வாகிகள்!
திரைப்படத் தணிக்கை விவகாரம் குறித்துப் பேசிய அவர், "மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் தற்போது தணிக்கை வாரியத்தையும் (Censor Board) கையில் எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கப் பார்க்கிறது. ‘பராசக்தி’ படத்தை அன்று எப்படித் தணிக்கை வாரியம் முடக்க நினைத்ததோ, அதேபோல் இன்று ‘ஜனநாயகன்’ படத்திற்கும் முட்டுக்கட்டை போடுவது கண்டிக்கத்தக்கது. கலைக்கு அரசியல் கிடையாது; எனவே இதில் அரசியல் செய்யாமல் படத்தை வெளியிட மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார். மேலும், ‘பராசக்தி’ படத்தில் காட்டப்பட்டுள்ள இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்றும், அதனை யாராலும் மறக்கடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் சூசகமாகக் கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: "யார் கூட கைக்கோர்க்கப் போறாங்க?" இன்னைக்கு தெரியப்போகுது தேமுதிக-வோட 'மெகா கூட்டணி' அறிவிப்பு!