தமிழகத்தில் தவெக அரசு அமைந்து சில மாதங்களுக்குள் ஆறு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொது வேட்பாளராகக் களமிறக்க தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இணைந்து திட்டமிட்டுள்ளன.
முதல்வர் விஜயின் சினிமா புகழால் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகம், சட்டம் ஒழுங்கு பிரச்னை, எம்.எல்.ஏ.க்களை இழுத்துச் செல்லும் செயல்கள் உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே விரைவில் அதிருப்தியை சந்தித்துள்ளது. இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி திருச்சி கிழக்கு, பெருந்துறை, தாராபுரம், மதுரந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை உள்ளிட்ட ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற தி.மு.க. தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பொது வேட்பாளர்களை நிறுத்தலாம் என தி.மு.க. முடிவு செய்தது. அந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி கணிசமான ஓட்டுகளைப் பெற்றிருந்தது.
இதையும் படிங்க: ராஜினாமா செய்து தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள்! விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்! 7 நாள் கெடு!

அம்பாசமுத்திரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இசக்கி சுப்பையா முதலிடம், காங்கிரஸ் வேட்பாளர் இரண்டாவது இடம், தவெக வேட்பாளர் மூன்றாவது இடம் பிடித்த நிலையில், இந்த மூன்று தரப்பினரும் தற்போது தவெக அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சீர்வரிசை அந்தத் தொகுதி மக்களிடையே தவெகவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியுள்ளது. மேலும் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாடார் சமூக வாக்காளர்கள் அடர்த்தியாக உள்ளனர். இந்த அம்சங்களை கணக்கில் கொண்டு சீமான் இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதை மனதில் கொண்டு எதிர்க்கட்சிகள் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளன.
சீமானை சம்மதிக்க வைக்கும் பொறுப்பை தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே சீமான் இல்லத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் அ.தி.மு.க.வை சம்மதிக்க வைக்க பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் தி.மு.க. தரப்பில் பேச்சு நடைபெற்று வருகிறது.
அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளர் ஏற்பாடு வெற்றி பெற்றால், மற்ற ஐந்து தொகுதிகளிலும் இதே மாதிரியான கூட்டணி உத்தியைப் பின்பற்ற தி.மு.க. திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த இணைப்பு தவெக அரசுக்கு பெரும் சவாலாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி! முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!