நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில், திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தார்.
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல், சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது என தெரிவித்தார்.

பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3 தமிழர்கள் படுகொலை உறுதியாகியும் முதல்வர் எங்கே? தவெக அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி!
இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்கு என கூறியுள்ளார். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கி இருப்பதாகவும், அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் நாதக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்..! போராடுவோம்... சீமான் ஆவேசம்..!!