அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதற்கு அடுத்த நாளே, அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் உட்பட செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக நிர்வாகிகளின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டன.
செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் சுமார் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மேலும், செங்கோட்டையனுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
செங்கோட்டையனுக்கு அதிமுகவில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமித் ஷாவை சந்திப்பதற்காக இன்று காலை கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: ஒண்ணு கூடிட்டாங்களே! நிச்சயமா செங்கோட்டையனை சந்திப்பேன்... OPS உறுதி
தற்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மனநிம்மதிக்காக ஹரித்துவார் செல்வதாகவும், டெல்லி செல்வதாக பரவும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் மறுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சியின் நன்மைக்காக ஒரு கருத்தை முன்வைக்கிறோம். அப்படியிருக்கையில் அந்த விவகாரத்தில் பொதுச்செயலாளர் சில முடிவுகளை எடுக்கிறார். அதில் எனக்கு எதிராக எடுக்க முடிவுகளுக்கு கருத்து கூற இயலாது என்றார்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் இருந்து கடந்த 2 நாட்களாக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தனக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருவதாகவும், 10,000க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: ஆஹா! இது நம்ப லிஸ்ட்லயே இல்லயே... செங்கோட்டையனுக்கு பரிவட்டம் கட்டி குஷியை வெளிப்படுத்திய OPS ஆதரவாளர்கள்