அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர். கே.ஏ.செங்கோட்டையன், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் 2 மணி நேர ஆலோசனை நடத்தினர். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தவெக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், செங்கோட்டையனுக்கு விஜய்க்கு அடுத்தப்படியாக முக்கியமான பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யைச் சந்தித்த செங்கோட்டையன் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார்.
அதிமுகவில் 52 ஆண்டுகளாக பயணித்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை கெளரவிக்கும் வகையில் த.வெ.க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரலாறு திரும்புகிறது... செங்கோட்டையனை புகழ்ந்து தள்ளிய தவெக நிர்வாகிகள்...!
தவெகவில் இணைந்த செங்கோட்டையனை விஜய் கட்சியின் துண்டு போட்டு வரவேற்றார். அப்போது விஜயிடம் தவெக தூண்டை தலைவணங்கி ஏற்றுக்கொண்டார் செங்கோட்டையன். தவெகவில் இணைய வந்த போது கூட, செங்கோட்டையனின் சட்டை பையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்துடன் வந்திருந்தது பெரிய கவனம் ஈர்த்தது.
தவெகவில் இணைந்த பிறகு செங்கோட்டையனை வரவேற்று வீடியோ வெளியிட்ட விஜய் கூட, 20 வயதில் எம்.ஜி.ஆரை நம்பி அவரது கட்சியில் இணைந்து அந்த இளம் வயதில் எம்.எல்.ஏவாக தேர்வான, அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கைக்கு உரிய நபராக, அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 வருடங்களாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், அரசியல் அனுபவம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுதுனையாக இருக்கும் அவருக்கும், அவருடன் இணைந்து நம்முடன் பணியாற்ற போகும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன் என்றே தெரிவித்தார். அதாவது தனது வீடியோவில் கூட செங்கோட்டையனுக்கும் அதிமுகவிற்குமான உறவு மற்றும் அக்கட்சியின் தலைவர்கள் மீது செங்கோட்டையன் கொண்ட விசுவாசம் பற்றியே விஜய் பேசியிருந்தார்.
வழக்கமான மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் தலைமையை கடுமையாக விமர்சிப்பார்கள். ஆனால் செங்கோட்டையனோடு சேர்த்து அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆருடனான விசுவாசம் குறித்தும் பாராட்டியது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்தது. தமிழக அரசியலில் விஜய் புது ட்ரெண்ட்டைக் கொண்டு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் சந்திப்பின் போது செங்கோட்டையன் கழுத்தில் த.வெ.க. துண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா.. வேண்டாம் என தவிர்த்த செங்கோட்டையன்..#Chennai | #Panaiyur | #TVK | #TVKVijay | #KASengottaiyan | #Pressmeet | #polimernews pic.twitter.com/jYoNpRdgsv
— Polimer News (@polimernews) November 27, 2025
இதனிடையே தவெகவில் இணைந்த பிறகு பனையூர் தலைமை அலுவலகத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருடன் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்ட அனைவரும் தவெக துண்டு அணிந்திருந்த நிலையில், செங்கோட்டையன் மட்டும் துண்டு அணியாமல் இருந்தார். இதை கவனித்த ஆதவ் அர்ஜூனா அருகே இருந்தவர்களிடம், “அண்ணே ஒரு துண்டு கொடுங்க”என தவெக கட்சி துண்டை தோளில் போர்த்தினார். அப்போது அதனை வேண்டாம் என மறுத்த செங்கோட்டையன், கழுத்தில் அணிவிக்கப்பட்ட துண்டை எடுத்தே விட்டார். இதனால் ஆதவ் அர்ஜூனாவின் முகமே மாறிப்போனது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: 2026ல் விஜய் தான்…! தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உறுதி..!