சென்னையில் உள்ள ஒரே விமான நிலையம் அடுத்த சில ஆண்டுகளில் தனது முழு திறனை எட்டிவிடும் என்பதால், புதிய பசுமை விமான நிலையம் அவசியம் என முந்தைய திமுக அரசு கருதியது. அதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் உள்ளூர் விவசாயிகளும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர்.
விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்பதே அவர்களின் முக்கிய அச்சம்.தேர்தலுக்கு முன் போராட்டத்தில் பங்கேற்ற விஜய், ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முழுமையாக கைவிட்டார். நிலங்கள் மீண்டும் மக்களிடமே திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்மையில் வெளியான அரசாணையால் புதிய கேள்விகள் எழுந்துள்ளன.
பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் 422 ஏக்கர் பரப்பில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த பூங்கா செயல்பட உள்ளது. இது விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற பகுதியே. ஏகனாபுரம் போன்ற போராட்டம் நடந்த கிராமங்களுக்கு அருகிலுள்ள இந்த இடமும் விவசாய நிலமாகவே உள்ளது.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் ரத்து! 13 கிராமங்களில் கொண்டாட்டம்! முதல்வர் விஜய்க்கு மக்கள் நன்றி!

“விமான நிலையம் வந்தால் விவசாயம் பாதிக்கும் என சொல்லி ரத்து செய்தீர்கள். சிப்காட் வந்தால் மட்டும் பாதிக்காதா?” என உள்ளூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எந்த பெரிய திட்டமும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வேளாண் நிலத்தை அழித்து வளர்ச்சி என்ற வாதத்தை எப்படி ஏற்பது என்பதே தற்போதைய விவாதம். இதற்கு இணையாக பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் அமைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
காலங்காலமாக மீனவர்கள் வசிக்கும் பகுதியில் இது செயல்படுத்தப்பட்டால் அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்ற கவலையும் எழுந்துள்ளது. சுத்தம், சுகாதாரம் என்ற பெயரில் மக்களை இடம்பெயர்க்கும் திட்டமா என்ற விமர்சனங்களும் கேட்கப்படுகின்றன. விவசாயப் பாதுகாப்புடன் தொழில் வளர்ச்சியை எவ்வாறு இணைப்பது என்ற சமநிலையை விஜய் அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்பதே இப்போது பொதுமக்களின் கவனத்தில் உள்ளது.
இதையும் படிங்க: பரந்தூர் தமிழ்நாட்டின் சொத்து..! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கருப்பு நாள்.. டிஆர்பி ராஜா ஆதங்கம்..!!