சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார். இந்தக் குழுவினருக்கு விருப்பு வெறுப்பு இல்லாமல் உண்மையை மட்டும் அறிக்கையாக சமர்ப்பிக்க ஸ்டாலின் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
குழுவினரைச் சந்தித்த ஸ்டாலின், “நீங்கள் என் பிரதிநிதியாகச் செல்கிறீர்கள். எனவே, கட்சியினர் கூறும் உண்மையை எந்த மறைப்பும் இன்றி என்னிடம் தெரிவிக்க வேண்டும். யாரையும் காப்பாற்றும் எண்ணமோ, யாரையும் பழிவாங்கும் எண்ணமோ இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார். தோல்விக்குக் காரணமாக தனது மீதோ அல்லது தன் குடும்பத்தினர் மீதோ புகார்கள் இருந்தாலும் அவற்றை மறைக்காமல் தெரிவிக்குமாறும் வலியுறுத்தினார்.
இதன்பிறகு, துணைப் பொதுச் செயலர் கனிமொழி, இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலர் பாரதி, முன்னாள் அமைச்சர் வேலு உள்ளிட்டோருடன் ஸ்டாலின் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: விஜய் அலையை சமாளிக்கிறது எப்பிடி?!! திட்டம் போடும் திமுக! இளைஞர்களுக்கு அடிக்கிது யோகம்!!

தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தபடி, வரும் மாதம் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது மற்றும் கனிமொழியை மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்துவது குறித்தும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தேர்தல் தோல்வி ஆய்வு முடிந்த பிறகு அனைத்து மாவட்டச் செயலர்களையும் தனித்தனியே அழைத்து ஸ்டாலின் பேச உள்ளார்.
முக்கியமாக, 30 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டச் செயலராக உள்ளவர்கள் மற்றும் தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்களிடம் ராஜினாமா கடிதங்களைப் பெற ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தி.மு.க.வில் பெரும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்டாலின் எடுக்கும் இந்த உள் ஆய்வு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் கட்சியின் எதிர்கால அரசியல் உத்திக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தோல்வியிலிருந்து பாடம் கற்று, அடுத்தகட்ட தேர்தல்களை எதிர்கொள்ள கட்சியை வலுப்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
இந்த ஆய்வு அறிக்கை வரும் நாட்களில் கட்சியில் பல முக்கிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்?! இன்று இரவு சென்னை திரும்புகிறார் கவர்னர் அர்லேகர்!