சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு மத நல்லிணக்கம் என்ற பெயரில் பிளவுவாத அரசியல் செய்வதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுத்தது, ஆனால் அதே மலையில் சந்தனக்கூடு விழாவுக்கு அனுமதி அளித்தது போன்ற செயல்கள் ஹிந்து மத வெறுப்பை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது அரசு அதிகாரிகளை ஓட்டு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம்! மதக்கலவரத்தை துாண்டுகிறது திமுக! அண்ணாமலை ஆவேசம்!
உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த போதிலும், அரசு அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று கூறி தடை விதித்தனர். ஆனால், அதே மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழாவுக்கு கொடியேற்ற அனுமதி அளிக்கப்பட்டது. இது ஹிந்து அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மத நல்லிணக்கமா? உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுத்துவிட்டு, அதே மலையில் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழாவுக்கு கொடியேற்ற அனுமதி அளித்தது திமுகவின் ஹிந்து மத வெறுப்பை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும், தமிழர்களின் வழிபாட்டு உரிமையையும் திமுக அரசு திட்டமிட்டு பறிக்கிறது. மத்திய பாதுகாப்புப் படையினருடன் சிலர் மட்டும் மலைக்கு சென்று தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என மிகைப்படுத்தி நீதிமன்ற உத்தரவை மீறியது. ஆனால், இரவோடு இரவாக சந்தனக்கூடு விழாவுக்கு பாதுகாப்பு அளித்தது எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில், “ஓட்டு வங்கிக்காக திமுக தலைவர்கள் முன்னெடுக்கும் பிளவுவாத அரசியலில், அரசு அதிகாரிகள் பங்குதாரர்களாக மாறிவிட்டனரா? முஸ்லிம் சகோதரர்களின் விழாக்களை கொண்டாடுவதில் ஹிந்துக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஹிந்துக்கள் தீபம் ஏற்றுவதில் முஸ்லிம்களுக்கும் பாதிப்பு இல்லை.
ஆனால், அமைதியாக நடக்க வேண்டிய மத விழாக்களில் திமுக ஏன் குட்டையை குழப்புகிறது? இரு சமூகங்களிடையே மதக் கலவரம் ஏற்படுத்தி, அதை வைத்து ஆட்சியை கைப்பற்றும் தீய எண்ணமே காரணம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த அறிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரப்பிலிருந்து இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், இதுபோன்ற விமர்சனங்கள் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இதான் ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்! இனி மக்கள் தெளிவா முடிவெடுப்பாங்க! அண்ணாமலை சூட்சமம்!