சென்னை, டிசம்பர் 13: 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்புகளை அதிமுகவைப் போன்று தமிழக பாஜகவும் தீவிரப்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களை விரைவில் பெற பாஜக முடிவு செய்துள்ளது.
எந்தெந்த தொகுதிகளில் பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனரோ, அந்தத் தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டுப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டின்போது எந்தவித சங்கடமும் ஏற்படக்கூடாது என்பதில் இரு கட்சித் தலைமைகளும் கவனமாக உள்ளன. அதிமுகவில் போட்டியிட விரும்புவோரிடம் நாளை மறுதினம் (டிசம்பர் 15) முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பார்வார்டு ப்ளாக்! கூட்டணிக்கு சிக்கல்! கேட்ட சீட் கிடைக்குமா?
இதற்கிடையில், நேற்றுமுன்தினம் (டிசம்பர் 11) அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜகவுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
நயினார் நாகேந்திரன் நாளை (டிசம்பர் 14) டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். அங்கு கூட்டணி தொடர்பான விவாதங்களுக்குப் பிறகு தமிழகம் திரும்பியதும், பாஜகவிலும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் எந்தத் தொகுதிகளுக்கு அதிக விருப்ப மனுக்கள் அளிக்கின்றனரோ, அந்தத் தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டுப் பெறுவது என்று பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
இம்மாத இறுதிக்குள் விருப்ப மனு பெறும் பணியை முடித்துவிட்டு, ஜனவரி மாதத்தில் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தவும், தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக நிறைவு செய்யவும் உதவும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி கட்சிகளைத் தீர்மானிக்கும் முழு அதிகாரம் பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் இந்த நடவடிக்கை கூட்டணி அரசியலில் புதிய உத்தியாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸை விட நாங்க பெரிய கட்சி!! பார்த்து கவனியுங்க!! திமுகவுக்கு அழுத்தம் தரும் விசிக! திருமா ட்விஸ்ட்!