சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினரும் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான ஏ.பி. சூர்யபிரகாசம் தனது பதவிகளுக்கு ராஜினாமா செய்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணமாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை மீது கடும் விமர்சனங்களை அவர் முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு ஏ.பி. சூர்யபிரகாசம் எழுதிய கடிதத்தில், தமிழக காங்கிரஸை திமுகவின் அடிமைகள் கூடாரமாக மாற்ற செல்வப்பெருந்தகை முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? தமிழக காங்.,சில் கோஷ்டி மோதல்! விளாசும் நயினார் நாகேந்திரன்!
திமுக அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதை திமுகவே பட்ஜெட்டில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், உண்மைக்கு மாறாக திமுக மீது பழி போடுவதாக காங்கிரஸ் தரவு மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி மீது வசை பாடுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெகுஜன திமுக எதிர்ப்பு காரணமாக திமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றும், அதில் காங்கிரஸும் சேர்ந்து தோல்வியடையக்கூடாது என்றும் ஏ.பி. சூர்யபிரகாசம் எச்சரித்துள்ளார். அதற்கு பதிலாக காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியில் பங்கு கோரி போராடும் காங்கிரஸ் தொண்டர்களை 'தற்குறிகள்' என்று வெளிப்படையாக விமர்சித்து அவமானப்படுத்திய செல்வப்பெருந்தகை தலைமையின் கீழ் பணியாற்ற என் சுயமரியாதை இடம் தரவில்லை என்று கூறி அவர் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக காங்கிரஸில் நீண்டகாலமாக நிலவும் உள்பிரச்சினைகள் மீண்டும் வெளிப்பட்டுள்ள இந்த சம்பவம் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கூட்டணி தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த ராஜினாமா புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: இரண்டாக உடையும் காங்கிரஸ்!! விஜய் போட்ட தூண்டிலால் ஆட்டம் காணும் கூட்டணி! புதிய கட்சி துவக்கம்?!