தமிழகத்தில் ‘டிட்வா’ புயல் காரணமாக பெய்த கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட போதிலும், இன்னும் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதற்கு மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடி என்று கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பாதிப்பு விவரங்களை கலெக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8,000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதையும் படிங்க: வாக்குறுதி எண் 356! நியாபகம் இருக்கா? செவிலியர் போராட்டம்! முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி?!
பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு முடிந்து கலெக்டர்கள் வேளாண் துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பினர். அதைத் தொடர்ந்து மாநில பேரிடர் ஆணையத்துக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், அரசு வருவாயில் பெரும்பகுதி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமாகச் செலவிடப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 செப்டம்பரில் தொடங்கியது.
சமீபத்தில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 1.30 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச் செலவு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ஜனவரி மாதம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி நிலைமையைச் சமாளித்து இழப்பீட்டை விரைவில் வழங்க நிதித்துறை முயற்சி செய்து வருகிறது. இழப்பீடு தாமதமானால் விவசாயிகள் போராட்டத்தில் இறங்க வாய்ப்புள்ளது என்று வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதி நெருக்கடி தமிழக அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஜி.கே.மணி தொகுதியில் அன்புமணி போட்டி?! மல்லுக்கட்டும் தொண்டர்கள்!! பாமக-வில் மோதல் உச்சக்கட்டம்!