தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணி நியமனங்களில் 888 கோடி ரூபாய் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை (ED) குற்றம் சாட்டியது. இந்த மோசடி விவகாரத்தை அம்பலப்படுத்தும் வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே வைக்கப்பட்ட பிரமாண்ட பேனரை, போலீஸார் அகற்ற முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 'ஒரு வேலைக்கு 25 லட்சம் என்றால், மொத்த லஞ்சப் பணம் எவ்வளவு?' என்ற கேள்வியுடன் வடிவமைக்கப்பட்ட அந்தப் பேனர், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி, அமலாக்கத் துறை தமிழக டிஜிபி-க்கு அனுப்பிய கடிதத்தில், நகராட்சி துறையில் (MAWS) நடந்த நியமனத்தில் ஒரு பதவிக்கு 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் கூறியது. இதன் மூலம் 888 கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும், FIR பதிவு செய்யுமாறும் வலியுறுத்தியது. 
இந்தத் தகவல், அரசியல் வட்டங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "இது இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் மோசடி" என்று கண்டித்து, CBI விசாரணை கோரினார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் மிகப்பெரிய மோசடி! வரிசையாக சிக்கும் கேரள நடிகர்கள்! ஆபரேஷன் நும்கோர்?
இந்நிலையில், அதிமுக ஐ.டி. அணி, இந்த மோசடியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே பிரமாண்ட பேனரை நிறுவியது. பேனரில், ஒரு பொது மக் கேள்வி கேட்பதுபோல் '2,538 பணியிடங்களுக்கு 25 லட்சம் ரூபாய் என்றால், மொத்த லஞ்சப் பணம் எவ்வளவு?' என்று காட்டப்பட்டிருந்தது. 

இதை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பியதும், உடனடியாக போலீஸார் அங்கு விரைந்தனர். பேனரை அகற்ற முயன்ற போலீஸாரை, அதிமுக ஐ.டி. அணி செயலாளர் ராஜ் சத்யன் எதிர்த்தார். "பேனரை அகற்ற மாட்டோம். வேண்டுமானால் வழக்கு போடுங்கள். இல்லை என்றால், இந்தக் கணக்குக்கு விடை சொல்லுங்கள்" என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிரச்சினை வேண்டாம் என்று போலீஸார் அங்கிருந்து விலகியதால், பரபரப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. பின்னர், அதிமுக ஐ.டி. அணி, "பேனரை கிழிக்க வந்த வேகத்தை, கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை தடுப்பதிலும், சென்னையில் அப்பாவி மக்களை வெட்டிய ரவுடிகளைப் பிடிப்பதிலும் காட்டியிருந்தால் நல்லது" என்று விமர்சித்தது. இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
திமுக அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, "இது மத்திய அரசின் அரசியல் பழிவாங்கல்" என்று கூறியுள்ளது. நகராட்சி அமைச்சர் கே.என். நேரு, "நியமனங்கள் நியாயமாக நடந்தன. ED-யின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதரம் அற்றவை" என்று தெரிவித்தார். ஆனால், வேலை தேடும் இளைஞர்களிடையே இந்த மோசடி விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்த 2,538 பணியிடங்களுக்கு, லஞ்சம் கொடுத்தவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ED தகவல் கூறுகிறது.
இந்தப் பேனர் சம்பவம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகளிடையேயான மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக, இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யும் எனத் தெரிகிறது. போலீஸ், பேனர்கள் சட்டப்படி அனுமதியுடன் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ED அறிக்கை எப்படி லீக் ஆச்சு?! அதிகாரிகளை துளைத்தெடுக்கும் அமித் ஷா! தி.மு.க.,விற்கு இனி பிரச்னை தான்!