சென்னை: தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க உதவி வழங்கும் திட்டத்தை இன்று (ஜனவரி 8, 2026) தொடங்கி வைத்தது.
சென்னை ஆலந்தூர் அருகே நசரத்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள 2.22 கோடிக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பங்கள் பயனடையும்.
இதையும் படிங்க: பொங்கலுக்கு வேட்டி, சேலை உண்டா? ரொக்கம் எவ்வளவு? புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்கப்படுகிறது. இதுதவிர, இலவச வேட்டி மற்றும் சேலையும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு தமிழக அரசு சுமார் ரூ.6,936 கோடி செலவிடுகிறது.
இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து பரிசுத் தொகுப்பையும் ரொக்கத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
டோக்கன் முறையில் வழங்கல் நடைபெறுவதால், நெரிசலைத் தவிர்க்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். டோக்கன் இதுவரை கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களை அணுகி, குறிப்பிட்ட நாட்களில் பெற்றுக்கொள்ளலாம்.

பரிசுத் தொகுப்பு வழங்கலுக்கு தேவையான முன்னேற்பாடுகளை கூட்டுறவுத்துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி மற்றும் சர்க்கரை 100 சதவீதம் அனுப்பப்பட்டுள்ளது. வேட்டி-சேலை தேவைக்கேற்ப குடோன்களில் இருந்து உடனடியாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளாக, ஒரே வளாகத்தில் பல ரேஷன் கடைகள் உள்ள இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரூ.3000 ரொக்கத்தை பயனாளிகள் முன்னிலையில் எண்ணி வெளிப்படையாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடியும் வரை ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பரிசுத் தொகுப்பில் தரக்குறைபாடு அல்லது வழங்கலில் தாமதம் ஏற்பட்டால், புகார் அளிக்க 1967 அல்லது 1800-425-5901 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.tnpds.gov.in என்ற இணையதளம் வழியாகவும் ஆன்லைனில் புகார் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ரொக்க உதவி இல்லாமல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.3000 ரொக்கம் சேர்க்கப்பட்டுள்ளது பயனாளிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் திருநாளை சிறப்பாகக் கொண்டாட இத்திட்டம் பெரிதும் உதவும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ரூ.3,000மா? ரூ.5,000மா? பொங்கல் பரிசு ரொக்கம் எவ்வளவு? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!