கோவை குறிச்சி குளத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம், ஊழியர்களின் போராட்டம், மதுபான விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
அப்போது காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் நடைமுறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் கவனம் பெற்றுள்ளன.
“தமிழகத்தின் மிகப்பெரிய ஸ்கேம் பாட்டில் ஸ்கேம்!”
தமிழகத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், இந்த விவகாரத்தில் மிகப்பெரிய லாபி செயல்படுவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். “தமிழகத்தின் மிகப்பெரிய ஸ்கேம் இந்த பாட்டில் ஸ்கேம்” என்று குறிப்பிட்ட அவர், தற்போது காலி மதுபாட்டில்களில் சுமார் 50 சதவீதம் மட்டுமே திரும்பப் பெறப்படுவதாகக் கூறினார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் பார் நடந்த இதெல்லாம் கட்டாயம்... புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...!
இந்த நடைமுறையைச் சீரமைக்க அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பும் இயந்திரங்கள் அமைத்து காலி மதுபாட்டில்களைச் சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.33 ஆயிரம் ஊதியம் – போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தல்!
டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியம் ரூ.14 ஆயிரத்திலிருந்து ரூ.33 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். வார விடுமுறை, சீருடை, பண்டிகைக் கால முன்பணம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் துறையை கண்ணியமான பணிச்சூழல் கொண்ட துறையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஊழியர்களின் போராட்டத்தைத் தூண்டுவதற்குப் பின்னால் பெரிய குழு செயல்படுவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். போராட்டத்தில் ஈடுபட்ட 960 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத இடங்களில் மாற்றுப் பணியாளர்களைக் கொண்டு கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
மதுபான விலையுடன் பாட்டில் தொகையும் சேர்ப்பு!
மதுபானங்களின் விலை நிர்ணயம் குறித்துப் பேசிய அமைச்சர், இனிவரும் காலங்களில் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையான MRP மட்டுமே வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் என்றார். காலி பாட்டிலுக்கான தொகையும் மதுபானத்தின் விலையிலேயே சேர்க்கப்படும் என்றும் விளக்கமளித்தார்.
தனியாருக்கு டாஸ்மாக் கடைகள்? அமைச்சர் சொன்ன முக்கிய பதில்!
தமிழகத்தில் மதுக்கடைகளைத் தனியாருக்கு வழங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்த வாய்ப்பை அரசு நிராகரிக்கவில்லை என்றும், இதுகுறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
அதேநேரத்தில், மதுக்கடைகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகிவிடாது என்றும் அவர் குறிப்பிட்டார். கடைகள் தனிநபர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றால் சிண்டிகேட் உருவாகும் அபாயம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், பார் டெண்டர் வெளியிடப்பட்டதும் எந்தெந்த இடங்களில் பார்கள் செயல்படுகின்றன என்ற பட்டியல் வெளியிடப்படும் என்றார். தீபாவளி பண்டிகையையொட்டி மதுபான விற்பனைக்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!