தமிழகத்தில் டாஸ்மாக் பார்களுக்கு வழங்கப்படும் அனுமதி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் மாதம் வரை பார்களுக்கான அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பார் அமைப்பதற்கான அனுமதி தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
அதன்படி, டெண்டர் முறையில் பார்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டியுள்ள இடத்திலோ அல்லது அந்தக் கடையிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள்ளோ பார்களை அமைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், வளர்ச்சி அல்லது நகரத் திட்டமிடல் ஆணையங்களால் வணிகப் பகுதியாகவோ, தொழிற்சாலைப் பகுதியாகவோ அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு இந்தத் தொலைவு தொடர்பான கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளில் பார்கள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!
பார்களுக்கான அடிப்படை வசதிகளைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு பாரும் குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் தரைப்பரப்பளவைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் கை கழுவும் வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். பார் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்களுக்குள் வாடிக்கையாளர்கள் அமர்வதற்குப் போதுமான மேசைகள் மற்றும் நாற்காலிகள் இருக்க வேண்டும். மேலும், பாருக்குள் மது அருந்துவது வெளியில் இருந்தோ அல்லது மதுபானம் விற்பனை செய்யும் கடையில் இருந்தோ தெரியாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும் புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், பார்களில் 'மது அருந்துதல் உடல்நலத்திற்குக் கேடு', 'பாதுகாப்பாக இருப்பீர்', 'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்' போன்ற வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 வயதுக்குக் குறைவான நபர்களைப் பார்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், அவர்களைப் பணியில் அமர்த்தக் கூடாது என்றும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோட்ட ஆயத்தீர்வை அலுவலர் பதவிக்குக் குறையாத அதிகாரிகள் பார்களில் ஆய்வு மேற்கொள்ளலாம். அதேபோல், மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட வட்டாட்சியர் பதவிக்குக் குறையாத அதிகாரிகளும் ஆய்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிகளின்படி, பார்களை ஏலம் விடுவதற்கான டெண்டர் அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாத இறுதிக்குள் பார்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு, ஜனவரி மாதம் முதல் புதிய அனுமதியின் அடிப்படையில் பார்கள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா...” - நவம்பர் 1 முதல் குடிமகன்களுக்கு ‘டபுள் ட்விஸ்ட்’ கொடுத்த தமிழ்நாடு அரசு...!