தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை தனியார்மயமாக்குவது குறித்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் சுமார் 4,000 டாஸ்மாக் சில்லறை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.50,000 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், தனியார்மயமாக்கப்பட்டால் அரசின் வருமானம் குறையுமா அல்லது அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெளியாகும் தகவல்களின்படி, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் பின்பற்றப்படும் முறையைப் போல, சில்லறை மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கும் ஏல முறை அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால், கடை உரிமத்துக்கான விண்ணப்பக் கட்டணம், ஆண்டு உரிமக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.10 'PARTY FUND' வசூல்? செந்தில் பாலாஜியை துருவி துருவி விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

மேலும், தனியார் உரிமையாளர்கள் மதுபானங்களை டாஸ்மாக் கிடங்குகளில் இருந்தே வாங்க வேண்டும் என்ற நடைமுறை தொடரும் என்றும் கூறப்படுகிறது. அப்போது கலால் வரி மற்றும் மொத்த விற்பனை வரி முன்கூட்டியே அரசுக்கு செலுத்தப்பட்ட பிறகே மதுபானங்கள் வழங்கப்படும். இதனால் சில்லறை விற்பனையை தனியார் மேற்கொண்டாலும், வரி வசூலில் அரசின் கட்டுப்பாடு நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில், கடைகளின் வாடகை, மின்சாரச் செலவு, ஊழியர் சம்பளம், பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் அனைத்தும் தனியார் தரப்பால் ஏற்கப்படும் என்பதால், அரசின் நிர்வாகச் சுமையும் குறையலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
டாஸ்மாக் ஊழியர்களின் வேலைவாய்ப்பு குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும், டாஸ்மாக் நிறுவனம் முழுமையாக மூடப்படாமல், மொத்த விநியோகம் மற்றும் கண்காணிப்பு அமைப்பாக செயல்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல ஊழியர்கள் அந்தப் பிரிவுகளுக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எனினும், டாஸ்மாக் தனியார்மயமாக்கப்படும், வருவாய் ரூ.70,000 முதல் ரூ.80,000 கோடியாக உயரும், அல்லது செயல்முறை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, தற்போது வெளியாகும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 41 இடங்களில் ரெய்டு..! சாட்டையை சுழற்றும் விஜய் அரசு..! பரபரக்கும் தமிழகம்..!!