அதிமுக கூட்டணி சேரப்போவது பாஜகவுடனா? தவெக-வுடனா? என முக்கோண விவாதங்கள் எழுந்து வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்றால் பாஜக.,விற்கு அதிமுக-வுடன் கூட்டணி வைப்பது மட்டுமே ஒரே சாய்ஸ்.

தங்களுடன் கூட்டணி வைக்க பலரும் தவம் கிடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'வெத்தாக' வெளியே மார்தட்டிக் கொண்டாலும் உண்மையில் கூட்டணி அமைத்தால் மட்டுமே தமிழக சட்டசபை தேர்தலில் களம் காண முடியும். அதுவும் பலமான கட்சியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே அது சாத்தியம். அதை அண்ணாமலை மட்டுமல்ல, டெல்லி மேலிடமே உணர்ந்துள்ளது. பாஜக.,வுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்பதை விஜய் தனது முதல் மாநாட்டியேலே உரக்கச் சொல்லி விட்டார். அதனால், வேறு வழியே இல்லாமல் சில பல தாஜா செய்து, அதிமுக கூட்டணிக்காக தேவுடு காத்துக்கிடக்கிறது பாஜக.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்... கேள்விக்கணைகளை தொடுத்த வானதி சீனிவாசன்!!

செங்கோட்டையனை வைத்து பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாகச் சொல்லப்பட்டாலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பாஜக.,விற்கு ஆதரவு இருந்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில், குறிப்பாக வட மாவட்டங்களில் பாஜக.,விற்கு எதிரான நிலை தான் உள்ளது. அதை விட முக்கியமாக இஸ்லாமியர்கள், பாஜக.,விற்கு எதிரான மனநிலையிலேயே உள்ளார்கள். இது கடந்த மக்களவை தேர்தலிலேயே அதிமுக படுதோல்வி அடைய இதுவும் ஒரு காரணம்.

பாமக மற்றும் தவெகவுடன் கூட்டணி வைப்பதையே எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். காரணம், பாமக.,விற்கு வட மாவட்டங்களில் கணிசமான ஓட்டு வங்கியும், செல்வாக்கும் உள்ளது. அதே போல் விஜய்க்கு தமிழகம் முழுவதும் இளைஞர்களின் ஆதரவு இருப்பதாக நம்புகிறார் எடப்பாடியார். இதனால்,பாமக- தவெகவுடன் கூட்டணி வைத்தால் வட மாவட்ட ஓட்டுக்களையும், இளைஞர்கள் ஓட்டுக்களையும் லாவிவிடலாம். இதன் மூலம் திமுக.,விற்கும் கடும் நெருக்கடி கொடுக்க முடியும் என எடப்பாடி பழனிச்சாமி கணக்குப்போட்டு வருகிறார்.

ஆனால், தனது தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என விஜய் கூறி வருவதால் அதை ஏற்றுக் கொள்வதில்தான் சிக்கலே. ஒருவேளை, தவெக பிடிவாதம் பிடித்தால் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிச்சாமி விருப்பமாக உள்ளார். சீமான் கட்சிக்கு தமிழகத்தில் 8 சதவீத வாக்குகள் உள்ளன. இதனால் அந்த ஓட்டுக்களும் அதிமுக.,விற்கு கிடைத்தால் அது கூடுதல் பலமாக இருக்கும் என எடப்பாடி பழனிச்சாமி கணக்குப்போடுகிறார். பாமக, விஜய், அல்லது நாம் தமிழர் கட்சி… இதுதான் எடப்பாடியாடின் விருப்பமாக உள்ளது.
இதையும் படிங்க: கூப்பிட்டா நாங்களும் வந்துருப்போம்... டிவிஸ்ட் அடித்த அண்ணாமலை!!