இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் முதல்முறையாக நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். திருப்பூர் குமரன் நினைவகத்தில் குமரன் சிலை மற்றும் மாநகராட்சி சந்திப்பு பகுதியில் உள்ள காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் இன்று காலை பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து திருப்பூர் மக்கள் மன்றம் என்ற பெயரில் தொழில் துறை மற்றும் அரசியல் கட்சியினர் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அவர் , திமுக , அதிமுக , கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சியினரிடம் இணைந்து பணியாற்றிய காரணத்தினால் என்னவோ இறைவன் என்னை அரசியல் பணியிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டதாக கருதுகிறேன். நாம் ஒரு திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது இறைவனின் கணக்கு வேறு மாதிரியாக அமைந்துவிடுகிறது. இருப்பினும் நான் இந்நிலைக்கு உயர்ந்திருப்பது இறை நம்பிக்கை தான் காரணம். அரசியலில் மாற்று கட்சி தலைவர்களை விமர்சனம் செய்கின்றோம். ஆனால் அவர்களிடமிருந்து நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பிரம்மாண்ட வெற்றியும் தோல்வியையும் சந்தித்த தலைவர் கலைஞர். இருப்பினும் தன்னுடைய உழைப்பை என்றும் நிறுத்தாதவர். அவர் தோல்வியடையும் போது மறுநாள் முரசொலி நாளிதழை படிக்கும் போது “தம்பி தூண்டு விடாதே எழுந்து வா தமிழ் மக்களை காப்பது நம் பொறுப்பு” என அதே கம்பீரத்தோடு எழுதி இருப்பார். தான் சார்ர்ந்திருந்த இயக்கத்தின் மாற்று சிந்தனையுள்ள நல்லகண்ணுவை நான் தோற்கடித்த போது மிகவும் வருத்தத்திற்கு உள்ளானேன். காரணம் அரசியல் , தன் நலனுக்கு அல்லாது பிறர் நலனுக்காக என்பதை உணர்த்தி வாழ்ந்து காட்டியவர் நல்லகண்ணு அவர்கள். அதேபோல் நிர்வாக திறன் மிகுந்த தலைவர் ஜெயலலிதா , நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். யார் எதை சொன்னாலும் கேட்டுக்கொண்டு அதில் உள்ள நல்லவைகளை எடுத்து சிந்தித்து செயல்படுபவர் பிரதமர் நரேந்திர மோடி அதனால்தான் தேச நலனுக்காக அவரால் முழு நேரமும் உழைக்க முடிகிறது.
இதையும் படிங்க: முதன்முறையாக... குடியரசு துணைத் தலைவராக தமிழகம் வந்த C.P. ராதாகிருஷ்ணன்..! உற்சாக வரவேற்பு...!
என்னை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தபோது ஒருமித்த குரலில் வெற்றி பெற முயற்சித்தார். அப்போதும் கூட சில ஊடகங்கள் சிபிஆர் தோற்றுவிடுவார் அவர் மூலமாக பிரதமர் நரேந்திர மோடியும் தோல்வியை சந்திப்பார் என விமர்சனம் செய்தனர். ஆனால் நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றால் இறை நம்பிக்கை காரணமானது. தற்போது திருப்பூர் ஆயத்த ஆடை துறையினர் கவலையை அறிகின்றேன். நாம் எத்தனையோ சரிவுகளை சந்தித்துள்ளோம். சாய ஆலை பிரச்சனைகள் வந்தபோது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சாய சுத்தகரிப்பு நிலையங்களை தொடங்கி வைத்தார். அதுபோல் பல சரிவுகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம். தற்போது வந்துள்ள சரிவு நம் கையில் இல்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என்ன நினைக்கிறார் என அவருக்கே தெரியவில்லை. அவரின் வரி உயர்வு காரணமாக திருப்பூர் தொழில் நகரில் ஆயத்த ஆடை துறை பாதிப்பை சந்தித்துள்ளது. இது குறித்து 3 முறை தொழில் துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். இரு நாடுகளுடன் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்து கொண்டிருப்பதாகவும் கருத்து பரிமாற்றம் நடந்து வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனால் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். தற்போது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதை விட இரு மடங்காக ஏற்றுமதி அதிகரிக்கும் நாள் வெகு விரைவில் வரும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் பாஜக அதிமுக காங்கிரஸ் மதிமுக தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் திருப்பூர் சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தனர் எனக்கூறினார்.
இதையும் படிங்க: நீங்க கவலைப்படாதீங்க! யாரும் தப்ப முடியாது! பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்கு ராகுல் ஆறுதல்!