புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கோயில் திருவிழாவின்போது தேர் வடத்தை பிடித்து இழுத்து ஆதிதிராவிடர்கள் திருவிழாவை, தேரோட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு காலங்காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் நேற்று தேர் வடம் பிடித்து இழுத்த போது சாதி பெயரை சொல்லி சிலர் ஆதிதிராவிட மக்களை திட்டியாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி நூற்றுக்கணக்கான ஆதிதிராவிட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் கார், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 12 பேர் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே புதுக்கோட்டை காவல்துறை, புலனாய்வு நடைபெறுவதற்கு முன்னராகவே இந்த சம்பவத்திற்கான காரணம் பெட்ரோல் பங்கில் நடந்த தகராறுதான் என்று கூறியுள்ளது. மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல்துறை முயன்று வருகிறது.

இந்த நிலையில் வடகாட்டு விவகாரத்தில் காவல்துறை சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை ஆதீனம் செய்தியாளர் சந்திப்பில் அவரது உயிருக்கு இஸ்லாமியர்களால் பாதுகாப்பில்லை என கூறியது அதிர்ச்சி அளித்தது. இது குறித்து காவல் துறை சிசிடிவி வெளியிட்டதில் அம்மாதிரியான நிகழ்வு ஒன்றுமில்லை. இது தன்னிச்சையாக நடைபெற்ற விபத்து, அதிலிருந்து ஆபத்தின்றி தப்பித்துள்ளார்.
உயர்ந்த பொறுப்பில் உள்ள மடாதிபதி சமூகப் பதற்றம் ஏற்படாத வகையில் அமைதியை நிலை நாட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், அவர் கொலை செய்ய முஸ்லிம்கள் முயற்சித்தார்கள் என்றெல்லாம் சொல்லியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இதை குற்றச் செயலாக மாற்றுவதற்கு முயல்கிறார். அவரது பேட்டியை சாதாரணமாக கடந்து விட முடியாது, இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: ஆபாச ஆக்ஷன்! பூச்சாண்டி காட்டிய போலீஸ். நொங்கெடுத்த ADMK நிர்வாகி...

வடகாடு கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிற சமயத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பட்டியலின மக்களின் பகுதிக்கு சென்று நூற்றுக்கணக்கான வீடுகளையும் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களையும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி நுணுக்கமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை மாற்று சமூகத்தினர் தங்களுக்குச் சொந்தம் என கூறி அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கு பட்டியலின மக்கள் நீதிமன்றத்துக்குச் சென்று கோயில் அவர்களுக்கே உரியது என தீர்ப்பு பெற்றுள்ளனர். இந்த நிலையில் திருவிழாவின்போது பாரம்பரிய உரிமைப்படி தேரை இழுக்க வந்த பட்டியலின மக்களை கடுமையாக தாக்கியது கண்டனத்துக்குரியது. சாதியை சொல்லி இழிவு படுத்தி, பட்டியலின மக்கள் குடியிருப்பில் புகுந்து தாக்கியுள்ளனர்.

இதில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. புலனாய்வு நடைபெறும் முன்னரே காவல்துறை ஒரு முடிவுக்கு வருவது, புலனாய்வுக்கு எதிராக முடிந்துவிடும்.எப்படி வன்முறை தொடங்கியது, யார் வன்முறையை கையில் எடுத்தார்கள் என்று புலனாய்வு நடத்தவேண்டும். காவல்துறை தங்களுக்கு கிடைத்த முதற்கட்ட தகவலை இறுதி முடிவாக அறிவிக்க கூடாது. காவல்துறை ஒர் தரப்பாக மாறக்கூடாது, காவல்துறை அனைவருக்கும் பொதுவானது. எனவே ஒருதரப்பின் கருத்தை சொல்லக்கூடாது.
வடகாட்டில் 12 பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள். வடகாட்டில் சாதிவெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதற்கு பின்னணியில் உள்ளவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறை சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: TVK...TVK... காற்றில் பறந்த விஜயின் அட்வைஸ்.. சொல் பேச்சை கேட்காமல் ரசிகர்கள் அலப்பறை..!