வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என மத்திய அரசின் உத்தரவு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோவையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் பெண் நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியர் கொலை சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோட்டத்தைக் காலி செய்து வெளியூர் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல்லடம், சிவகிரி இரண்டு சம்பவங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் உள்ளனர் என்பது உறுதி ஆகியுள்ளது. கொங்கு பகுதியில் இனி தோட்டத்துப் பகுதியில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உள்பட விடுமுறைக்கு வந்தவர்களைக்கூட ஊருக்குத் திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என எல்லா மாநில அரசுகளுக்கும் மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. யார் வழக்கு தொடுக்கிறார்களோ அவர்களை முதலில் கைது செய்வதை திமுக அரசு வழக்கமாக வைத்துள்ளது. மதுரை ஆதீனம் விவகாரத்திலும் அதேதான் நடந்துள்ளது.
இதையும் படிங்க: திடீரென மொத்த தண்ணீரையும் திறந்துவிட்ட இந்தியா... வெள்ள அபாயம்... பதற்றத்தில் பாகிஸ்தான்..!

அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்டதால் சிறுபான்மையினர் வாக்கு பாதிக்கப்படாது. இக்கூட்டணி குறித்து வரவேற்று பேசியதற்காக ஐக்கிய ஜமாத் அமைப்பு அதிமுக நிர்வாகியான அப்துல் ஜப்பார் ஜமாத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை போல் சிறுபான்மையினர் பலர் ஆதரவாக இக்கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதையும் படிங்க: போர் ஒத்திகை என்றால் என்ன..? தேசிய அளவில் என்ன நடக்கும்..? தெரிந்து கொள்ளுங்கள்..!