சென்னை, டிசம்பர் 11: 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளைப் பெறுவதற்காகவும், ஆட்சியில் பங்கு பெறுவதற்காகவும் தி.மு.க.,வை மறைமுகமாக மிரட்டும் வகையில், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை முன்கூட்டியே வாங்கும் அறிவிப்பை தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இது டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் த.வெ.க.,வுடன் (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி அமைக்க விரும்புவதன் அழுத்தத்தால் நடந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி சார்பில், வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது. அப்போது, தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மேலும், வரும் டிசம்பர் 20ம் தேதிக்குள் இதற்கான முடிவைத் தெரிவிக்கும்படி முதல்வரிடம் கோரியது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் தொண்டர்கள், டிசம்பர் 15ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் (டிசம்பர் 9) அறிவித்தார். அதன் சில மணி நேரங்களுக்குப் பின், டிசம்பர் 31ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு டெல்லி காங்கிரஸ் மேலிடத்தின் அழுத்தமே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆட்சி அதிகாரத்தில் பங்கு! தராவிடில் தவெகவுடன் கூட்டணி!! அகல கால் வைக்கும் காங்கிரஸ்!! திமுகவுக்கு தீராத தலைவலி!!
தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் தெரிவித்ததாவது: டெல்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலும், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் ஒன்றுகூடி, த.வெ.க., தலைவர் நடிகர் விஜயுடன் கூட்டணி அமைக்க வியூகம் வகுத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் தமிழக காங்கிரஸில் உள்ள தி.மு.க., ஆதரவு குழுக்களின் தலைவர்கள், தி.மு.க.,வுடன் கூட்டணி தொடர வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தி.மு.க.,வின் இறுதி முடிவை அறியும் முன்பே, 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை வாங்க டெல்லி தலைவர்கள் அழுத்தம் தருவதாகக் கூறுகின்றனர். இந்த அறிவிப்பு தி.மு.க., கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக தி.மு.க., தரப்பில் இதுவரை எந்தக் குழுவையும் அமைக்கவில்லை. அதனால், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்குவதன் அர்த்தம் என்ன? ஏன் இப்போது இது செய்யப்படுகிறது? என்ற கேள்விகள் தி.மு.க., தரப்பில் எழுந்துள்ளன. வரும் டிசம்பர் 14ம் தேதி டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 'ஓட்டு திருட்டு' கண்டன பேரணி நடைபெறுகிறது.
அதன் மறுநாள், டிசம்பர் 15ம் தேதி, தி.மு.க.,வுடன் கூட்டணி தொடர்வதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து முடிவெடுக்க டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதனால் தான், விருப்ப மனுக்களை டிசம்பர் 31 வரை வாங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளங்களில், கூட்டணி ஆட்சி மற்றும் அதிக தொகுதிகள் கோரும் வீடியோக்களை தொகுத்து பதிவிடப்பட்டு வருகிறது. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.ஆர். ராஜேஷ்குமார், எம்.பி.க்கள் ஜே.விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பேச்சுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த செயல்பாடு தி.மு.க., கட்சியினரிடையே கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தலில் த.வெ.க., தலைவர் விஜய் தனது கட்சியை 234 தொகுதிகளிலும் போட்டியிட வைப்பதாக அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸின் இந்த நடவடிக்கை இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் என எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தி.மு.க.,வுடன் நீண்டகால கூட்டணி இருந்தாலும், தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் பங்கு காரணமாக காங்கிரஸ் அதிக கோரிக்கைகளை வைப்பதாகவும், இது தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கலாம் என்றும் அரசியல் கட்சி பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இனி எப்புடி அதிக சீட்டு கேட்க முடியும்? பீகார் தோல்வியால் தமிழக காங் குமுறல்!! திமுக கூட்டணி கட்சிகள் கப்சிப்!