தமிழக காங்கிரஸில் மாவட்ட மற்றும் மண்டல அளவில் நிர்வாகிகளை நியமிப்பதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் நோக்கில், சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை குறைத்து, புதிய நிர்வாக அமைப்பை உருவாக்குவது இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் அமைக்கப்பட்ட மறுசீரமைப்பு குழு, ஏற்கனவே மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து கருத்துகளை கேட்டுள்ளது. முன்னாள் மாவட்ட தலைவர்களும் பார்வையாளர்களாக அனுப்பப்பட்டு, மண்டல மற்றும் மாவட்ட பதவிகளுக்கு பொருத்தமான நபர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அந்தப் பட்டியல்கள் குறித்து இறுதி ஆலோசனை நடத்தும் வகையில் சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை வடக்கு, திண்டுக்கல் மாநகர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, திருப்பத்தூர், சேலம் மாநகரம், திருவண்ணாமலை தெற்கு உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். மாணிக்கம் தாகூருடன் முன்னாள் மத்திய அமைச்சர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ராகுல் விவகாரத்தில் விஜய்க்கு நேரடி மெசேஜ்! காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பால் மாறிய காட்சி!!

சில மாவட்டங்களில் நிர்வாகிகள் தேர்வு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 துணைத் தலைவர்கள், 10 பொதுச் செயலாளர்கள், 10 செயலாளர்கள் மற்றும் ஒரு பொருளாளர் என 31 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக காங்கிரஸில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் தொடர்பான விவாதமும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகள் ராகுலை ஏற்க வேண்டும் என்று முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பிலேயே மாறுபட்ட பதில்களும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகிகள் மறுசீரமைப்பு மற்றும் கட்சிக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. மூன்று நாட்கள் நடைபெறும் ஆலோசனையில் மொத்தம் 20 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: காங்., எம்.எல்.ஏ தாரகைக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை! அரசியலாக்க வேண்டாம்! மாணிக்கம் தாகூர் விளக்கம்!