தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23, 2026) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் இலக்கில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த இலக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வரும் தேர்தல் ஆணையம், இம்முறை அதீத நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.
இந்த நம்பிக்கைக்கு முக்கிய காரணம் ‘எஸ்.ஐ.ஆர்.’ (சிறப்பு சுருக்க திருத்தப் பணி). இதன் மூலம் இரட்டைப் பதிவு, இறந்தவர்கள் பெயர், முகவரி மாறியவர்களின் பெயர்கள் உள்ளிட்ட ‘போலி’ வாக்குகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் இப்போது மிகவும் தெளிவாக இருப்பதால், உண்மையான வாக்குப்பதிவு சதவீதம் இயல்பாகவே உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், 100 சதவீத வாக்குப்பதிவு இலக்குக்கு இடையே ஒரு சுவாரசியமான போட்டியும் நடைபெறுகிறது. அது ‘நோட்டா’ வாக்குகள். 2014 லோக்சபா தேர்தலில் அறிமுகமான நோட்டா, யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாத வாக்காளர்களின் கோபத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வழியாக உருவானது.
இதையும் படிங்க: இந்தமுறை வாக்கு சதவீதம் கட்டாயம் அதிகரிக்கும்! களம் அப்படி! தேர்தல் கமிஷன் எதிர்ப்பார்ப்பு!

அந்த ஆண்டு நாடு முழுவதும் 1.1 சதவீதம் (59.97 லட்சம்) வாக்குகள் நோட்டாவுக்கு சென்றன. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 5.82 லட்சம் வாக்குகள் (1.4 சதவீதம்) நோட்டாவுக்கு பதிவாகின. இந்திய அளவில் நோட்டா வாக்குகள் அதிகம் பெற்ற தொகுதியாக நீலகிரி முதலிடம் பிடித்தது. அங்கு மட்டும் 46,559 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன.
2018 முதல் 2022 வரையிலான பல்வேறு தேர்தல்களில் சேர்த்து நாடு முழுவதும் 1.29 கோடி வாக்குகள் நோட்டாவுக்கு சென்றுள்ளன. ஆனால், காலப்போக்கில் நோட்டா மீதான விழிப்புணர்வு சற்று குறைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இம்முறை தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. இதுவரை ஒரே கட்சிக்கு மாறி மாறி வாக்களித்து சலிப்படைந்த வாக்காளர்களுக்கு இப்போது புதிய தேர்வுகள் கிடைத்துள்ளன. எனவே, இதுவரை நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் இம்முறை தங்களுக்குப் பிடித்த கட்சிக்கு வாக்களித்து, நோட்டாவுக்கு ‘டாட்டா’ சொல்லும் சூழலும் உருவாகலாம்.
இன்றைய வாக்குப்பதிவில் 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கை எட்ட முடியுமா? அல்லது நோட்டா வாக்குகள் குறைந்து, உண்மையான போட்டி அதிகரிக்குமா? என்பது மாலை 6 மணிக்குப் பிறகு தெரியவரும். வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தீவிர முயற்சிகளும், நான்குமுனைப் போட்டியும் இணைந்து தமிழக தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையை படைக்குமா என்பதை இன்றைய வாக்குப்பதிவு தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: இந்தமுறை வாக்கு சதவீதம் கட்டாயம் அதிகரிக்கும்! களம் அப்படி! தேர்தல் கமிஷன் எதிர்ப்பார்ப்பு!