அறநிலையத்துறையில் நிர்வாக நலன் கருதி சமீபத்தில் 18 இணைக் கமிஷனர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பொதுத் தேர்வு எழுதவுள்ள குழந்தைகளின் பெற்றோர், குற்றச்சாட்டுக்கு ஆளாகாத பெண் அதிகாரிகள் எனப் பலர் மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திராவிட ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் இணைக் கமிஷனர்கள், அதிகாரிகள் பெரும்பாலும் ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டனர். இதனால் கோயில் நிலங்கள், கடைகளின் வாடகையை நிர்ணயிப்பதிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கப்பட்டன. கோயில் மரபுகள், அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பூஜாரிகளின் உரிமைகளில் அதிகாரிகள் அதிகளவில் தலையிட்டனர்.
இவையெல்லாம் பெரும்பாலான இணைக் கமிஷனர்கள் விருப்பப்பட்டுச் செய்யவில்லை. ஆட்சியாளர்களின் உத்தரவு மற்றும் அழுத்தம் காரணமாகவே நடந்தது. அவ்வாறு உத்தரவிடும் அமைச்சர், துறைச் செயலர், கமிஷனர் உத்தரவை மீறி நேர்மையான அதிகாரிகளாலும் எதையும் செயல்படுத்த முடியாது.
இதையும் படிங்க: ஆளுங்கட்சியின் ஐ.டி விங் போல செயல்படும் காவல்துறை!! எதுவுமே கட்டுப்பாட்டில் இல்லை! கனிமொழி காட்டம்!
இந்நிலையில் திராவிட ஆட்சியில்லாமல் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்தது. அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ரமேஷ், துறை ரீதியான நடவடிக்கைகள் பல எடுத்து வருகிறார். அதேநேரம் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது பின், பக்தர்கள் எதிர்ப்பால் திரும்பப் பெறுவது போன்ற தடுமாற்றங்களும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் 18 இணைக் கமிஷனர்கள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் பாதிபேர் பெண்கள். இவர்களில் வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதும் பிள்ளைகளின் பெற்றோர், குற்றச்சாட்டுக்கு ஆளாகாதோர், பணியிடமாற்றம் செய்து ஓராண்டு கூட நிறைவடையாதவர்களும் உள்ளனர்.
அறநிலையத்துறை தரப்பில் கூறியதாவது: கடந்த ஆட்சியாளர் விருப்பத்திற்கு ஏற்பச் செயல்பட்ட ஒரு சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது சரிதான். ஆனால் இந்த மாற்றத்தில் நல்ல அதிகாரிகளும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். எந்த ஆட்சியாக இருந்தாலும் அமைச்சர், செயலர், கமிஷனர் உத்தரவை மதித்தே நடக்க வேண்டியுள்ளது. தவறு நடந்தால் கீழ்மட்ட அதிகாரிகள் மீதே பழி விழும். உத்தரவிடும் அதிகாரிகள் தப்பிவிடுகின்றனர்.
அதிகாரிகளை மூன்று ஆண்டிற்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டியது அவசியம்தான். அதேநேரம் இந்த மாறுதல் தேர்வு காலம் முடிந்த பின் அமைய வேண்டும் என அவர்கள் கூறினர். இணைக் கமிஷனர்கள் இடமாற்றம் குறித்து விளக்கம் கோர கமிஷனரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை.
இதையும் படிங்க: பருவமழை முன்னெச்சரிக்கை தீவிரம்... மேயர் பிரியா அரசுக்கு உதவ வேண்டும்! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!