திருச்சி சமயபுரம் அருகே பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் தொடர் காத்திருப்பு போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 49-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் 5வது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் நேரில் போராட்டக் களத்திற்கு வந்தனர். ஆனால், உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதற்காக திருச்சி சமயபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் நூதன முறைகளிலும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேளாண்துறை அமைச்சர் ஆர்.வினோத், கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ், அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் உள்ளிட்டோர் வந்தனர். அப்போது பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு அரசுக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும், அதற்கான நிதி ஏற்பாடுகளை மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு… 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி!

மேலும், சுமார் ரூ.3,000 கோடி கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும், இதற்காக 20 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் காலகட்டம் என்பதால் உடனடியாக புதிய அறிவிப்பை வெளியிடுவதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விளக்கத்துக்கு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டது. சிலர் கோஷங்களை எழுப்பியதால் போராட்டக் களத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறி அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிடும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சமயபுரம் பகுதியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: “மேட்டூர் அணை திறந்தும் விவசாயிகளுக்கு பயன் இல்லை!” - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!!