திமுகவும், பாஜகவும் மறைமுகமாக இணைந்து ஓர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதாக தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்று பெயர் பெற்ற, கடல் கடந்து படை நடத்தி இலங்கை முதல் இந்தோனேஷியா வரை தெற்காசியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி புரிந்த ஒப்பற்ற பேரரசன், மாபெரும் வெற்றி சரித்திரத்தை தன் மார்பினில் தாங்கியவன், சோழப் பேரரசனின் வெற்றி பேரொளியாக திகழ்ந்தவர் ராஜேந்திர சோழன்.

ராஜராஜ சோழனின் மகனாகப் பிறந்தாலும் தந்தையையும் தாண்டி வெற்றி தடம் பதித்த தமிழ் பேரரசன். தன் வெற்றியின் அடையாளமாக இருப்பதற்காக அமைத்த நகரம்தான் கங்கைகொண்ட சோழபுரம். ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமாக நிமிர்ந்து நிற்கிற ஒரு நகரம் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பெருஞ்சிறப்புக் கொண்டது.
இதையும் படிங்க: தன்னை கேலி செய்யும் தவெக.. கண்டுக்காத விஜய்.. கமிஷனர் ஆபிஸ் படியேறிய வைஷ்ணவி..!!
மாபெரும் யானைப்படை, கடற்படையை கட்டமைத்திருந்த வீறு மிகுந்த சோழப் பேரரசால் அமைக்கப்பட்டு, இன்றளவும் தமிழ் மண்ணுக்கும் தமிழகத்திற்கும் தனிப்பெரும் அடையாளமாக இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு, தமிழையும் தமிழ்நாட்டையும் ஓரவஞ்சனையுடன் ஒதுக்கும் மத்திய பாஜக அரசின் பிரதமர் வந்து ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு, சோழர்களின் பெருமை குறித்து நமக்கு பாடம் எடுப்பது போலவும் பேசி சென்றுள்ளார்.
75 ஆண்டுகளைக் கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார்தட்டிக் கொள்ளும் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக, தமிழர் பெருமையான சோழப்பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால் இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் மத்திய பாஜக அரசு இதை கையில் எடுத்து இருக்காது. இதையெல்லாம் செய்யாமல், பிரதமர் வருகை தமிழ் நாட்டுக்கு பெருமை என்று வாஞ்சையாக சொல்லி சிலாகித்தது இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு என்று தவெக தலைவர் விஜய் கடுமையாக சாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி சோழப்பேரரசின் பெருமையை கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து மத்திய பாஜக கையில் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது திமுக அரசு. கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து தமிழர் நாகரிகத்தையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் மத்திய பாஜக அரசு இப்போது இங்கு வந்து சோழர்களின் பெருமை பற்றி பேசி உள்ளது முழுக்க முழுக்க கபட நாடகம் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே அரசியலில் கபட நாடகம் போடுவதையே இயல்பாக கொண்ட திமுக ,இப்போது மத்திய பாஜக அரசின் கபட நாடகத்திற்கு தாழ் பணிந்து வணங்கி தங்கள் மறைமுக உறவினருக்கு விசுவாசத்தை காட்டியுள்ளது. எதிரெதிராக இருப்பது போல வெளியில் காட்டிக் கொண்டு உள்ளுக்குள் மறைமுகமாக இணைந்து ஓர் அரசியல் நாடகத்தினை அரங்கேற்றும் திமுகவையும் பாஜகவையும் ஓரணியில் கபடதாரிகள் என்று தான் அழைக்க வேண்டும் என்று விஜய் கூறினார்.
இதையும் படிங்க: தவெக IN.. பாஜக OUT.. அமித்ஷா, அண்ணாமலைக்கு ஆப்பு.. இபிஎஸ்-ன் தகிடுதத்தோம் திட்டம்..!