மயிலாடுதுறையில் தொடரும் தவெகவினரின் அத்துமீறல் 10% பார்ட்டி ஃபண்ட்’ தர மறுத்ததால் குறைந்த தொகைக்கு எடுத்த டெண்டர் ரத்து. லஞ்சு லாவண்யமற்ற ஆட்சி என்பதை நம்பியவரின் பரிதாபம். அதிக தொகைக்கு டெண்டர் எடுத்தவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக புகார். மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய தவெக செயலாளருக்கு டெண்டர் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் 10 இடங்களில் தலா ரூ.4 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைத்து மின் இணைப்பு வழங்குவதற்கான டெண்டரில், குறைந்த தொகைக்கு டெண்டர் எடுத்தவரிடம் 10 சதவீதம் பார்ட்டி ஃபண்ட்’ கேட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
மேலும், குறைந்த தொகைக்கு டெண்டர் எடுத்தவருக்கு ஒப்பந்தம் வழங்காமல், அதிக தொகைக்கு ஏலம் கேட்டவருக்கு வேலை வழங்கப்பட்டதால் அரசுக்கு சுமார் ரூ.7 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக துணை ஒப்பந்ததாரர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!
மயிலாடுதுறை பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அகத் என்பவர் துணை ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார். மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் 10 இடங்களில் போர்வெல் அமைத்து மின் இணைப்பு வழங்கும் பணிக்காக ஒப்பந்ததாரர் மூலம் துணை ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக ரூ.40 ஆயிரம் முன்வைப்புத் தொகையை அப்துல் அகத் தனது வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தியுள்ளார். தலா ரூ.4 லட்சம் மதிப்பிலான பணிக்கு ரூ.3.30 லட்சம் என குறைந்த தொகைக்கு டெண்டர் கோரியிருந்ததாக கூறப்படுகிறது.
டெண்டர் திறக்கப்பட்ட மறுநாளே, 10 சதவீதம் ‘பார்ட்டி ஃபண்ட்’ வழங்க வேண்டும் என தவெக மாவட்டச் செயலாளர் தரப்பில் கேட்கப்பட்டதாக அப்துல் அகத் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், நான் ஏற்கனவே 18 சதவீதம் தள்ளுபடி செய்து இந்த வேலையை எடுத்துள்ளேன். மேலும் 10 சதவீதம் வழங்க என்னால் முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து 3 நாட்களுக்குப் பிறகு அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகவும், உடனடியாக ரூ.40 ஆயிரம் முன்வைப்புத் தொகை அவரது வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரித்தபோது, ரூ.4 லட்சம் மதிப்பிலான பணியை ரூ.3.95 லட்சத்திற்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக அப்துல் அகத் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், குறைந்த தொகைக்கு டெண்டர் எடுத்தவருக்கு ஒப்பந்தம் வழங்காமல், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அதிக தொகைக்கு ஏலம் கேட்டவருக்கு டெண்டர் வழங்கியதன் மூலம் அரசுக்கு பண இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும், லஞ்சம் மற்றும் ஊழலற்ற ஆட்சி என கூறும் தவெக தரப்பினர், 10 சதவீத ‘பார்ட்டி ஃபண்ட்’ கேட்டு பணம் வசூலிப்பதுடன், அரசுக்கும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனது புகாரில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, சீர்காழியைச் சேர்ந்த தீரன் என்பவர் கூறுகையில், தாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஒப்பந்ததாரர்களிடம் துணை ஒப்பந்தப் பணிகளுக்காக விண்ணப்பித்து வருவதாகவும், இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதுபோல் சுமார் 10 பேர் ஒப்பந்தப் பணிக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த ஜூன் மாதம் ஒப்பந்ததாரருக்கு மனு அளித்த மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய தவெக செயலாளர் சேத்தூர் முருகேசனுக்கு ஒப்பந்ததாரர் உரிமம் கிடைத்ததைத் தொடர்ந்து, தற்போது அதிக தொகைக்கு ஏலம் எடுத்து 3 டெண்டர்களைப் பெற்றுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
10 ஆண்டுகளாக துணை ஒப்பந்ததாரராக பணியாற்றி அனுபவம் இருந்தும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் புதிதாக வந்த தவெக ஒன்றியச் செயலாளருக்கு சால்வன்சி சான்று மற்றும் ஒப்பந்தப் பணிகள் கிடைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.
ஊழலற்ற ஆட்சி நடத்துவதாக கூறும் நிலையில், தவெக ஒன்றியச் செயலாளருக்கு சான்றிதழ்கள் மற்றும் ஒப்பந்தப் பணிகள் கிடைத்திருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தகுதியுள்ள தங்களுக்கு அரசு ஒப்பந்தமும் அதற்கான உரிமம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!