வேலூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. அகரம்சேரி அருகே கொல்லமங்களம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசியபோது, அவர் தனது ஆட்சி எப்படி இருக்கும் என்பதை தெளிவாகவும், மக்களோடு நெருக்கமாகவும் விளக்கினார். ஆட்சிக்கு வந்தவுடன், தான் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்திப்பேன் என்று கூறினார். தனது ஆட்சியில் என்னென்ன நடக்கும் என்பதையும் விஜய் பட்டியலிட்டார்
பெண்கள், பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் பாதுகாப்பு நமது ஆட்சியில் நம்பர் ஒன்றாக இருக்கும். சட்டம் ஒழுங்கு கடுமையாக இருக்கும். அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் முதல் தரமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு என்று லட்சங்களை கொட்டி தனி சென்டர்கள் போய் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது., அரசு பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டங்களே போட்டித் தேர்வுகளை எளிமையாக சந்திக்கும் வகையில் தரமாக அமைக்கப்படும்.

உயர்நிலை பள்ளி பாடத் திட்டங்களில் அடிப்படை அரசியல் சாசன திட்டம் சேர்க்கப்படும். மாநிலம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் வங்கிகளின் செயல்பாடுகளில் அவற்றை அணுகும் முறை குறித்து மாணவர்களுக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் தேர்வுகள் அற்ற செயல்முறை பாடமாக கற்பிக்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு சார்ந்த கல்வி நிலையங்கள் மற்றும் அதன் சேர்க்கை குறித்து புரிதலும் தெளிவும் மாணவர்களுக்கு உருவாக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான மற்றும் தரமான கதவுகள் பொருத்தப்பட்ட கழிவறைகள் அமைப்பது உறுதி செய்யப்படும். போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: கல்லாப்பெட்டி கூட்டணி... சொத்து விவரத்தை வெளியிட தயாரா? விஜய் கேள்வி..!!
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்கள் ஆகியவற்றில் சரிபாதி பெண்களாக இருக்க வழிவகை செய்யப்படும். மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பிரசவம் பார்க்கும் வசதியுடன் அமைக்கப்படும். பேருந்து போக்குவரத்து இல்லாத கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களே இல்லாத நிலை உருவாக்கப்படும். ஏற்கனவே அமைப்புசாரா தொழிலாளர்கள் இருந்தாலும் ஆட்டோ, டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுனர்கள் நலன்களுக்காக, குடும்ப நலன்களுக்காக தனியாக நலவாரியம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும், தனி கவனம் செலுத்தப்படும். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் கருத்துக்கள் அனைத்தும் கேட்கப்பட்டு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் உருவாக்கப்படும் என்று விஜய் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரூர் விஷயத்தில் என்மேல ஏன் பழியை தூக்கி போட்டீங்க? முதல்வரை கேள்விகளால் துளைத்த விஜய்..!!