தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆண்டு வந்த திமுக, அதிமுகவிற்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூட தவெக 40 முதல் 60 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என கணிக்கப்பட்ட நிலையில், அனைத்து கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி தவெக 108 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதற்கு மாவட்ட நிர்வாகிகளின் கடும் உழைப்பும், களப்பணிகளுமே காரணம் என தவெக தலைமை உறுதியாக நம்புகிறது. ஆட்டோ ஓட்டுநர், கர்ப்பிணி பெண், செய்தியாளர், ஐ.டி. ஊழியர் என யாருமே நினைத்து பார்க்காத வகையில் தவெக வேட்பாளர்களாக களமிறக்கிய சாமானியர்கள் வெற்றி பெற்று இன்று சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களாக அமர்ந்துள்ளனர்.
அரசியல் வரலாற்றையே திருப்பி போட்ட இந்த வெற்றியை மாவட்ட நிர்வாகிகளுடன் கொண்டாட தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வரும் 22ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பின்னர் நடக்கவுள்ள முதல் பிறந்தநாள் என்பதால் மாவட்டந்தோறும் அன்னதானம், ரத்த தானம்,நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கலைநிகழ்ச்சிகள் என நிர்வாகிகள் தடபுடலான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
அதற்கு முன்னதாகவே தவெக நிர்வாகிகளுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர் விஜய் தயாராகி வருகிறார். அடுத்த வாரம் முதல் மாவட்டந்தோறும் 20, 20 பேராக முக்கிய மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற உழைத்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களை கெளரவிக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். இந்த சந்திப்பின் போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி, வர உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... கோவையில் தீயாய் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா...!
சட்டமன்ற தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்றது போல், உள்ளாட்சி தேர்தலிலும் தனிப்பெரும்பானை பெற உழைக்க வேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் விஜய் சில அறிவுறுத்தல்களை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மாவட்டந்தோறும் யாரை எல்லாம் தலைவர் சந்திக்க வேண்டும் என்ற பெயர் பட்டியலை தயார் செய்து அனுப்பவும் தலைமை மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை இந்த வார இறுதிக்குள் தர வேண்டும் என்றும், அதற்கு அடுத்த வார தொடக்கத்தில் இருந்து நிர்வாகிகளுடனான சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “தவெக அமைச்சரவையில் அனைவருமே ஜோக்கர்கள்...” - பாரபட்சம் பார்க்காமல் விஜய் ஆட்சியை விளாசித் தள்ளிய திமுக முன்னாள் அமைச்சர்...!