ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், சரளைப் பகுதியில் வரும் 18-ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புப் பரப்புரை நிகழ்வின் இறுதிக்கட்டப் பணிகளைப் பார்வையிட்ட அக்கட்சியின் தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த செங்கோட்டையன், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரச்சார சுற்றுப்பயணத் திட்டங்களை நான் வகுத்துக் கொடுத்ததைப் போல, தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கான திட்டங்களை வகுத்துக் கொடுப்பீர்களா என்று கேட்கிறீர்கள். தலைவர் விஜய் விருப்பப்பட்டால், தமிழகம் முழுவதும் அவரது தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டமிடல் வகுக்கும் பணியை நான் மேற்கொள்வேன்" என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, முதல்வர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கும் மேலாகச் சிறப்பாக நடைபெறும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘பேசணும்… கம்முனு இருக்கக் கூடாது!’ – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜயை சாடிய அண்ணாமலை
வரவிருக்கும் மாபெரும் கூட்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து கே.ஏ. செங்கோட்டையன் விரிவாகப் பேசினார். காவல்துறை கூறிய விதிமுறைகளையும் தாண்டி, மிகவும் சிறப்பான முறையில் பாதுகாப்பு அரண்கள் ஏற்படுத்தப்பட்டு, கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. "இதுவரை வேறு எந்தக் கூட்டமும் இந்த அளவிற்கான முன்னேற்பாடுகளுடன் நடக்கவில்லையெனக் காவல்துறையினரே பாராட்டு தெரிவித்துள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
கூட்டத்தைக் கண்காணிக்க 5 ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கூடுதலாக 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பங்கேற்பவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். காவல்துறையின் வசதிக்காக 40 வாக்கி டாக்கிகள் வழங்கப்பட உள்ளன.
14 ஆம்புலன்ஸ் வாகனங்களில், 42 மருத்துவர்கள் மற்றும் 72 செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு வரவிருக்கிறது. குடிநீர்த் தேவைக்காக 20 சின்டெக்ஸ் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளதுடன், ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்படும். மேலும், 20 இடங்களில் மொபைல் கழிப்பறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு பாஸ், அடையாள அட்டை, க்யூ.ஆர். கோடு போன்ற எதுவும் வழங்கப்பட மாட்டாது. 10 ஆயிரம் தொண்டர்கள், 25 ஆயிரம் பொதுமக்கள் என மொத்தம் 35 ஆயிரம் பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், கூட்டம் சிறப்பாக நடைபெற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்டு, தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக விளங்கும் தலைவர் விஜய்யின் உரையைக் கேட்டுச் செல்லலாம்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: "நேற்று வந்த காளான்கள் திமுகவை அழிக்க தகுதி அற்றவர்கள்" – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவேசம்!