மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டாவது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற ஜனவரி 15ஆம் தேதி நடைபெற உள்ளது. மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் மனுக்களை திரும்பப் பெற்றதால், பாஜக கூட்டணி 68 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி இதை கடுமையாக விமர்சித்துள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர்களை அமலாக்கத்துறை (ஈடி), சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டி பயமுறுத்தி, அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றிகளை விலைக்கு வாங்க பாஜக முயற்சிக்கிறது என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக வெற்றிக்கு EV மெசினும்! எலெக்ஷன் கமிஷனுமே காரணம்!! காங்கிரஸ் மீண்டும் குற்றச்சாட்டு
இதுபோன்ற செயல்களை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது என்று அக்கட்சி காட்டமாக தெரிவித்துள்ளது.

பாஜகவின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாகவும், தேர்தல் விதிகளை மீறுவதாகவும் உத்தவ் சிவசேனா விமர்சித்துள்ளது. எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தாக்கல் செய்த பிறகு அவர்களை அச்சுறுத்தி மனுக்களை திரும்பப் பெற வைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அக்கட்சி கூறியுள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தல்களில் இதுபோன்ற சம்பவங்கள் கட்சிகளுக்கு இடையே மோதலை தீவிரப்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: வெளியானது கேரளா உட்பட 4 மாநில வரைவு வாக்காளர் பட்டியல்!! மொத்தம் 95 லட்சம் பேர் நீக்கம்!