தமிழக அரசியலில் கைது நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் மீண்டும் விவாதப் பொருளாகி உள்ளன. தி.மு.க.,வைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி நேரில் சந்திக்காதது குறித்து அக்கட்சிக்குள் சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் விஜயை விமர்சித்ததாக கூறப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் திருச்செந்தூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். ஆனால், கைது செய்யப்பட்ட அதே நாளில் அவருக்கு ஜாமின் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி அறிக்கைகள் வெளியிட்டிருந்தாலும், நேரடியாக களத்தில் இறங்கி சந்திப்பு நடத்தவில்லை என்ற விமர்சனம் கட்சியின் சில நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அப்பா மு.க.ஸ்டாலின் துவங்கிய #MISA_Batch! அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி கேம் ஸ்டார்ட்!
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படும் போது, தலைமையின் நேரடி ஆதரவு என்பது தொண்டர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். தற்போது அறிக்கைகள் மட்டுமே வெளியாகின்றன. ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் போது களப்பணியும் முக்கியம்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், உதயநிதியின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள் விவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, தி.மு.க., ஆட்சியில் நடந்த சில சம்பவங்களுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக தலைவராக இருந்த விஜய் நேரடியாக போராட்டங்களில் பங்கேற்றதை சுட்டிக்காட்டும் சிலர், தற்போது எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி கள அரசியலில் தீவிரமாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில், உதயநிதியின் அரசியல் செயல்பாடு, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அவர் எடுக்கும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் ஆகியவை தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. தி.மு.க.,வுக்குள் எழுந்துள்ளதாக கூறப்படும் இந்த அதிருப்தி, வரும் கால அரசியல் நகர்வுகளில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது! சாமானியர்களுக்கு இடமில்லை! கவுன்சிலர் பாபு குற்றச்சாட்டு!