மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும், துணை பொதுச் செயலாளருமான மல்லை சத்யா, தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கி வருகிறார். நாளை மறுதினம் சென்னை அடையாறு பகுதியில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்து, அவரது குடும்பத்தின் சொத்துகள், மதுபானத் தொழில், வாரிசு அரசியல் உள்ளிட்டவற்றைத் தாக்கியுள்ளார். “தமிழகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக வைகோ நடைபயணம் செல்கிறார் என்றால், அது தி.மு.க.வுக்கு எதிரான நடைபயணம்தானே?” என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார். அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மல்லை சத்யா, கடந்த சில மாதங்களாக வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோவுடன் கருத்து வேறுபாடுகளால் மோதல் வெடித்திருந்தார். கட்சியில் வாரிசு அரசியல் நடைபெறுவதாகவும், தன்னை துரை வைகோவுக்காகவே நீக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: மக்கள் நல கூட்டணி உருவானதில் உள்ள மர்மங்கள்!! குட்டையை குழப்பும் மல்லை சத்யா! வெளிவருமா உண்மைகள்?!
இதையடுத்து, கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தை மீறி செயல்படுவதாகக் கூறி, வைகோ அவரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கினார். இதற்கு எதிராக, மல்லை சத்யா ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி, கட்சிக்கு எதிரான விரோத செயல்களில் ஈடுபட்டதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நீதி கோரினார்.
இந்த நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா, தனது எதிர்காலப் பயணத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். “வைகோ தன் மகன் துரைக்காகவே என்னை கட்சியில் இருந்து நீக்கினார்.
என் எதிர்காலம் அரசியல் கட்சியா அல்லது சமூக அமைப்பா என்பதை ஆலோசிக்க, புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவை அமைத்தோம். அக்குழுவின் ஆலோசனையின்படி, நாளை மறுதினம் (நவம்பர் 20) சென்னை அடையாறில் புதிய கட்சியைத் தொடங்குகிறோம்” என்று அவர் தெரிவித்தார். இந்தப் புதிய கட்சியின் பெயர், கொள்கைகள், கொடி ஆகியவை இன்று அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மல்லை சத்யாவின் குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. “மத்திய அமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் துரை வைகோவுக்கு உள்ளது. அதனால் தான் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட முயல்கிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் வைகோ குடும்பத்திற்கு 250 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன.
அவரது உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகளால் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் 5 கோடி ரூபாய்க்கு நட்சத்திர விடுதியை வாங்கினார். இப்போது 10 கிரவுண்ட் பரப்பில் அரண்மனை போன்ற புதிய வீட்டைக் கட்டி, ரகசியமாக புதுமனை புகுவிழா நடத்தினார்” என்று அவர் விவரித்தார்.
மேலும், வைகோவின் போதை எதிர்ப்பு நடைபயணத்தையும் மல்லை சத்யா கடுமையாக விமர்சித்தார். “வைகோ உறவினர்கள் மதுபான ஆலை நடத்தி வரும் நிலையில், போதைப் பொருட்களுக்கு எதிராக அவர் நடைபயணம் செல்கிறார். இது தமிழகத்தில் போதை எதிர்ப்பு நடைபயணமா, இல்லை தி.மு.க.வுக்கு எதிரான நடைபயணமா என்ற சந்தேகம் எழுகிறது. சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்தவர் வைகோ. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்” என்று அவர் சவால் விட்டார்.
பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணியை கட்சிக்கு அழைத்துவந்ததை நினைத்து இப்போது வருத்தப்படுவதுபோல், வைகோவும் ஒரு நாள் வருத்தப்படுவார் என்றும் மல்லை சத்யா கூறினார். மதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய கட்சியைத் தொடங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வைகோ உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். “மல்லை சத்யா எங்களை களங்கப்படுத்தும் தீவிரத்தில் இருக்கிறார். துரோகிகள் கூட சொல்லத் துணியாத அபாண்டங்களை துணிந்து சொல்கிறார். இது கட்சியின் கொள்கை, நன்மதிப்பு, ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும்” என்று வைகோ கடுமையாக விமர்சித்தார்.
கட்சியின் உள் ஜனநாயகத்தை படுகொலை செய்ததாகவும், போலியான விசாரணை நடத்தியதாகவும் மல்லை சத்யா கூறியதற்கு, “இது துரோகத்தையும் தாண்டியது” என்று வைகோ பதிலளித்தார்.
இதையும் படிங்க: திமுக ஆதரவு எங்களுக்குத்தான்! மதிமுகவை நினைச்சு வருத்தம்! ட்விஸ்ட் வைத்த மல்லை சத்யா