நாடகங்களை அரங்கேற்றுவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடுமையாக சாடியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதில், சிவகங்கை மாவட்டம், திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இது ஒரு கொலை என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த 2020 ஜூன் மாதம் 22-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு க.ஸ்டாலின், "லாக்அப் மர்ம மரணங்களுக்கு, உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும். அநியாயமாக இரண்டு உயிர்களைக் கொடூரமாகப் பறிக்கும் அளவுக்கு நடந்து கொண்டது காவல்துறை என்றால், இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், இப்போது திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார், காவல்துறை விசாரணையின் போது கொல்லப்பட்ட விவகாரத்தில், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் தனக்கு, எந்த சம்பந்தமும் இல்லாதது போலவும், இதற்கு முழுக்க முழுக்க காவல்துறையினர் மட்டுமே காரணம் என்பது போலவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார். அஜித்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. நகையை திருடி விட்டதாக அஜித்குமார் மீது புகார் கொடுத்தது யார்? ஒருவர் மீது திருட்டு புகார் வந்தால் வழக்கு பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு விசாரணையை தொடங்க வேண்டும். கைது செய்ய வேண்டும். ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலேயே, சட்ட விரோதமாக, தனிப்படை அமைத்து அஜித்குமாரை அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி உள்ளனர். காவல்துறையினர், சட்ட விரோதமாக ஒரு தனிப்படை அமைக்கிறார்கள் என்றால், ஒருவரை அடித்து துன்புறுத்துகிறார்கள் என்றால், அதற்கு யாரோ ஓர் உயர் அதிகாரி உத்தரவிட்டிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

அந்த உயர் அதிகாரி யார்? அந்த உயர் அதிகாரிக்கு உத்தரவிட்ட அரசியல் அதிகாரம் கொண்ட நபர் யார் என்று பல கேள்விகள் எழுகின்றன. திமுக ஆட்சியில், சர்வ அதிகாரமும் கொண்ட யாரோ ஒருவர் உத்தரவின் பேரில்தான் அஜித்குமாரை போலீசார் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி உள்ளனர். அஜித்குமாரை சட்ட விரோதமாக விசாரிக்க உத்தரவிட்ட அந்த அதிகார மையம் யார் என்பது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை சரியாக நிர்வாகம் செய்திருந்தால், சட்டப்படி தான் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தால், காவல்துறையினர் இதுபோன்று செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே காவல்துறையினர், சட்டப்படி செயல்படாமல், திமுக நிர்வாகிகளின் உத்தரவுப்படி செயல்படுகிறார்கள் என்பது தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அஜித்குமார் கொலையிலும் இது உறுதியாகி உள்ளது. அஜித் குமார் கொலைக்கு அரசியல் தலையீடு முக்கிய காரணமாக இருந்துள்ளது. எனவே, இதற்கு காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், அவர் ஏதோ எதிர்க்கட்சித் தலைவரை போல, காவல்துறைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல காவல்துறை மீது மட்டும் பழி போட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கிறார். அதற்காக சில அமைச்சர்களை அனுப்பி, அஜித்குமார் குடும்பத்துடன் பேசி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். நாடகங்களை அரங்கேற்றுவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். நாடகங்கள் நடத்தி தான் அவர்கள் கட்சியை வளர்த்தார்கள். ஆட்சியைப் பிடித்தார்கள். ஆனால், இனி எத்தனை நாடகங்கள் நடத்தினாலும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்களை கண்டறிந்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இல்லையெனில் அதற்கான விலையை திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலினும் கொடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது முருகன் மாநாடு... அடித்து சொல்லும் வானதி சீனிவாசன்!!