தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) தலைவர் வேல்முருகன், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டசபைக்குள் மற்றும் வெளியேயும் தமிழக அரசுக்கு பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தும், எந்த ஒரு கோரிக்கையையும் தி.மு.க. அரசு பொருட்படுத்தவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
வேல்முருகன் கூறுகையில், “சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழக அரசிடம் 10 முக்கிய கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு, ஈழத் தமிழர்களுக்கான பொது வாக்கெடுப்பு, தமிழக அரசு வேலைகளில் 100% உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு, மத்திய அரசு வேலைகளில் தமிழர்களுக்கு 80% ஒதுக்கீடு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை, சுங்கக் கட்டணம் ரத்து உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் தி.மு.க. அரசு எதையும் ஏற்கவில்லை” என்றார்.

தொகுதிப் பங்கீடு விவகாரத்திலும் கடும் அதிருப்தி நிலவியது. கடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேல்முருகன், இந்த முறை கூடுதல் தொகுதிகள் மற்றும் தனிச் சின்னத்தில் போட்டியிடக் கோரினார். ஆனால் தி.மு.க. ஒரு தொகுதி மட்டுமே வழங்க முன்வந்ததால் பேச்சுவார்த்தை உடைந்தது.
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கு Goodbye சொல்லும் வேல்முருகன்?! தமிழக வாழ்வுரிமை கட்சி டிமாண்ட்! மு.க.ஸ்டாலின் ஆலோசனை?!
“எங்கள் 10 கோரிக்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கலாம். அதற்கான முடிவை விரைவில் அறிவிப்போம்” என்று வேல்முருகன் தெரிவித்தார். இந்த விலகல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்ட முதல் பெரிய விரிசலாக பார்க்கப்படுகிறது.
தி.மு.க. தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வராத நிலையில், வேல்முருகனின் இந்த முடிவு வட மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...!