தவெக தலைவர் நடிகர் விஜய், பெரம்பூர் தொகுதிக்கான வேட்பு மனுவில் மூன்றாவது முறையாக புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் இந்த திருத்தம் நடைபெற்றுள்ளது.
விஜய் தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். முதலில் தாக்கல் செய்யப்பட்ட இரு வேட்பு மனுக்களிலும் பல்வேறு முரண்பாடுகள் இருந்தன.
பெரம்பூர் தொகுதி மனுவில் விஜய்க்கு எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மனுவில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இரு தொகுதிகளிலும் அவரது வயது விவரமும் முரண்பாடாக இருந்தது.
இதையும் படிங்க: 3வது முறையாக மாற்றப்பட்ட வேட்பாளர்! முணுமுணுக்கும் நிர்வாகிகள்! ஓசூர் தவெகவில் நடந்த உள்ளடி வேலைகள்!
இந்தப் பிழைகள் காரணமாக வேட்பு மனு நிராகரிக்கப்படும் அபாயம் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, தவெக வக்கீல்கள் சார்பில் பெரம்பூர் தேர்தல் அதிகாரியிடம் திருத்த மனுக்கள் அளிக்கப்பட்டன.

கடந்த 30ஆம் தேதி முதல் திருத்தம் செய்யப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சில தகவல்கள் இன்னும் விடுபட்டிருந்ததால், ஏப்ரல் 4ஆம் தேதி மீண்டும் திருத்தம் செய்யப்பட்ட புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்றாவது பிரமாண பத்திரத்தில் மதுரை மாநாட்டில் ரசிகர்களைத் தூக்கி வீசிய வழக்கு, கொளத்தூரில் பிரசாரத்தின்போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கு உள்ளிட்ட விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், விஜய்யின் பிரசார வாகனத்தின் மதிப்பு (ரூ.6 கோடி) மற்றும் சரியான வயது விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய பிரமாண பத்திரத்தை விஜய் நேரில் தாக்கல் செய்யவில்லை. பெரம்பூர் தவெக மாவட்ட செயலாளர் சிவா, தேர்தல் நடத்தும் அதிகாரி கீதாவிடம் சமர்ப்பித்தார்.
ஒரே தொகுதிக்கு மூன்று முறை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தேர்தல் வரலாற்றில் அரிதான சம்பவமாகக் கருதப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளில் இப்படி திருத்தங்கள் செய்யப்படுவது, தவெகவின் தேர்தல் தயாரிப்பில் அனுபவக் குறைவை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விஜய்யின் இரு தொகுதி வேட்பு மனுக்களிலும் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் திருத்தங்கள் தேர்தல் அதிகாரிகளிடையேயும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விவகாரம் விஜய்யின் வேட்பு மனுக்களின் செல்லுபடியை பாதிக்குமா என்பது இப்போது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: மெயின் ஸ்க்ரீனுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மருகமன்!! நண்பனுக்காக களத்தில் குதித்தார் சபரீசன்!!