கல்வி கண் திறந்த, பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளையொட்டி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வு, காமராஜரின் கல்வி மற்றும் சமூகப் பணிகளைப் போற்றும் வகையில் நடைபெற்றது.
காமராஜர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவராகவும் புகழப்படுகிறார். அவரது மதிய உணவு திட்டம் மற்றும் கட்டாய கல்வி முயற்சிகள், தமிழ்நாட்டில் கல்வி அறிவை உயர்த்தியதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. இதை நினைவுகூரும் வகையில், தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், விஜய் காமராஜரின் பங்களிப்புகளைப் புகழ்ந்து பேசினார்.
மேலும் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்வி தான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர். உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் பயன்பாட்டுக்கு அணைகளைக் கட்டியவர். வீடு உயர்ந்தால் நாடு உயரும் என்று வேலைவாய்ப்புகளைப் பெருக்கத் தொழிற்சாலைகளை உருவாக்கியவர். தன்னலமற்ற சேவைகளால் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.
இதையும் படிங்க: லாக்கப் மரணமடைந்த 24 பேர் குடும்பத்துக்கு கிட்ட சாரி கேட்காதது ஏன்? விஜய் சரமாரி கேள்வி..!

கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமது ஆட்சியில் மசச்சார்பின்மையையும் நிர்வாகத்தில் நேர்மையையும் கடைப்பிடித்தவர். சமூகநீதிக் கொள்கை வழியில் எளியவர்களுக்கும் அதிகாரமளித்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை, பனையூரில், கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று விஜய் தெரிவித்துள்ளார். மேலும் இந்நிகழ்வில், தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
காமராஜரின் பிறந்தநாள், தமிழ்நாடு அரசால் கல்வி வளர்ச்சி நாளாகவும் கொண்டாடப்படுகிறது. விஜய்யின் இந்த மரியாதை, தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக காமராஜரை மதிக்கும் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. முன்னதாக, விஜய் அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட பிற தலைவர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தியுள்ளார். இந்நிகழ்வு, அரசியல் மற்றும் சமூக ஈடுபாட்டில் விஜய்யின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி காமராஜரின் புகழை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதாகவும், கல்வி மற்றும் சமூக நீதிக்கான அவரது பங்களிப்பை நினைவுகூருவதாகவும் அமைந்தது.
இதையும் படிங்க: இது ஒன்னும் உங்க அப்பன் வீட்டு காசு இல்ல.. மக்களோட பணம்.. சீறிய விஜய்..!