தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களை பெற்ற கட்சியாக விளங்கினாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற இலக்கத்தை எட்ட முடியவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஐந்து எம்எல்ஏக்களும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய போதிலும் மெஜாரிட்டிக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை காண்பிக்காததால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தவெக தரப்பில் இருந்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அந்த கடிதத்தை விசிகவிற்கு வாட்ஸ் அப் மூலமாக தவெக தலைமை அனுப்பியதாகவும், நெருக்கடியான இந்த சூழ்நிலையில் இப்படி வாட்ஸ்அப் மூலம் கடிதம் அனுப்பி ஆதரவு கோருவது சரியா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜயை தவறாக வழிநடத்துவதாகவும், ஆட்சி அமைக்கத் தேவையான தெளிவான பெரும்பான்மை கிடைக்காத ஒரு சூழ்நிலையில், அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: விஜய் சர்க்கார் தானா..? பெரும் எதிர்பார்ப்பு..! திருமாவளவன் பேட்டி..!!
விஜய், தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித் தலைவர்களை உடனடியாக நேரில் சந்தித்திருக்க வேண்டாமா? இரண்டாம் நிலைத் தலைவர்களின் வலையில் சிக்காமல் இருப்பது குறித்தும், ஆளுநர் தேர்தல் மூலம் பாஜக தமிழகத்திற்குள் நுழைவதைத் தடுப்பதன் அவசியம் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டாமா? வாட்ஸ்அப் மூலம் ஆதரவு கேட்டு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு, பிறகு “பதிலளியுங்கள்” என்று சொல்வதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? என சரமாரியாக விமர்சித்திருந்தார்.
இதை பார்க்கும் போது விசிக, தவெகவிற்கு ஆதரவளிக்காது என்ற கருத்து எழுந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள செய்தி தமிழக அரசியல் களத்தையே பரபரக்க வைத்துள்ளது. அப்செட்டில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனிடம் போனில் பேசிய விஜய், ஆதரவு குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதாகவும், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, அவரை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்வதாகவும் விஜய் தரப்பில் இருந்து வாக்குறுதி தரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் திருமாவளவனுக்கு மன மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இருப்பினும் இன்று மாலை நடைபெறவுள்ள உயர்நிலைக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!